2016 ஆம் ஆண்டில், வாண்டா டென்ச் தனது பேரனை நன்றி தெரிவிக்கும் விருந்துக்கு அழைப்பதாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். ஆனால் அவருடைய பேரன் தன்னுடைய தொலைபேசி என்னை சமீபத்தில் மாற்றியதை அவர் அறியவில்லை. அதற்குப் பதிலாக ஜமால் என்ற வேறொரு நபருக்கு அந்த குறுஞ்செய்தி போய்விட்டது. ஜமால் தான் யார் என்பதை தெளிவுபடுத்திய பிறகும், நான் இரவு உணவிற்கு உங்களோடு சேர்ந்துகொள்ளலாமா என்று கேட்டார். “நிச்சயமாக” என்று வாண்டா அவரை வரவேற்றார். ஜமால் குடும்ப விருந்தில் சேர்ந்தார். அது அவருக்கு வருட பாரம்பரியமாகிவிட்டது. ஒரு தவறான அழைப்பு, வருடாந்திர ஆசீர்வாதமாக மாறியது.
முகமறியாத புதிய நபரை இரவு உணவிற்கு அழைத்த வாண்டாவின் கருணை, லூக்காவின் நற்செய்தியில் இயேசுவின் ஊக்கத்தை எனக்கு நினைவூட்டுகிறது. ஒரு பிரபலமான பரிசேயரின் வீட்டில் இரவு விருந்தின் போது (லூக்கா 14:1), அழைக்கப்பட்டவர்கள் யார் என்பதையும் அவர்கள் தங்களுக்கான இருக்கைக்காய் எவ்விதம் போராடினார்கள் என்பதையும் இயேசு பார்த்தார் (வச. 7). விருந்துபண்ணுகிறவனிடம், மற்றவர்கள் பதிலுக்கு என்ன செய்வார்கள் என்று எதிர்பார்த்து அவர்களை விருந்துக்கு அழைத்தால் ஆசீர்வாதம் குறைவாய் இருக்கும் என்கிறார் (வச. 12). ஆனால் ஏழைகளையும் இயலாதவர்களையும் அழைப்பித்து அவர்களுக்கு விருந்துபண்ணினால், மேன்மையான ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கக்கூடும் (வச. 14) என்று சொல்லுகிறார்.
வாண்டாவைப் பொறுத்தவரை, நன்றி தெரிவிக்கும் இரவு உணவிற்கு ஜமாலை தனது குடும்பத்துடன் சேர அழைத்ததன் விளைவாக நீடித்த நட்பின் எதிர்பாராத ஆசீர்வாதம் அவரது கணவரின் மரணத்திற்குப் பிறகு அவருக்கு பெரும் ஊக்கமாக இருந்தது. நாம் மற்றவர்களை அணுகும்போது, நாம் எதைப் பெறலாம் என்னும் நோக்கத்தோடு அல்லாமல், கிறிஸ்துவின் அன்பு நம்மூலமாய் வழிந்தோடுவதால், நாம் அதிக ஆசீர்வாதத்தையும் ஊக்கத்தையும் பெறுகிறோம்.
எதிர்பாராத அழைப்பு உங்களை உற்சாகப்படுத்தியது எப்போது? நீங்கள் என்ன ஆசீர்வாதங்களை அனுபவித்தீர்கள்?
பரலோகத் தகப்பனே, நீங்கள் என்னை வழிநடத்தும்போது மற்றவர்களை ஆசீர்வதிக்க விரும்பும் இதயத்தை எனது அழைப்புகள் பிரதிபலிக்கட்டும்.