கருச்சிதைவு ஏற்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, வலேரி ஒரு சில பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்தாள். சில மைல்களுக்கு அப்பால் இருந்த அவளுடைய ஜெரால்ட் என்னும் கைவினையாளர் ஒருவர் அவள் விற்ற குழந்தை தொட்டிலை ஆர்வத்துடன் வாங்கினார். அதை வாங்கும்போது, வலேரியிடம் பேசிய அவரது மனைவியின் வாயிலாக, வலேரியின் பெரும் இழப்பைக் குறித்து அறிந்துகொண்டார். வீட்டிற்கு செல்லும் வழியில் அவளது நிலைமையைக் கேள்விப்பட்ட ஜெரால்ட், தொட்டிலைப் பயன்படுத்தி வலேரிக்கு ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்க முடிவு செய்தார். ஒரு வாரம் கழித்து, அவர் கண்ணீருடன் ஒரு அழகான பெஞ்சை அவளுக்கு பரிசளித்தார். “இங்கே நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், அதற்கான ஆதாரம் இங்கே இருக்கிறது” என்று வலேரி பெருமிதப்பட்டாள்.
வலேரியைப் போலவே, ரூத்தும் நகோமியும் பெரும் இழப்பை தங்களுடைய வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தது. நகோமியின் கணவரும் அவளுடைய இரண்டு குமாரர்களும் மரித்துபோய்விட்டனர். தற்போது அவளும் அவளுடைய மருமகளான ரூத்தும் ஆதரவற்று நிர்க்கதியாய் நிற்கின்றனர் (ரூத் 1:1-5). அங்கே தான் போவாஸ் வருகிறார். போவாஸின் நிலத்தில் சிந்தியிருக்கும் கதிர்களை பொறுக்குவதற்கு போன ரூத்தைக் குறித்து போவாஸ் கேள்விப்படுகிறார். அவள் யார் என்று அறிந்த பின்பு அவளுக்கு தயைபாராட்டுகிறார் (2:5-9). “எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயைகிடைத்தது” (வச. 10) என்று ரூத் ஆச்சரியத்துடன் கேட்கிறாள். அதற்கு போவாஸ், “உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், … எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது” (வச. 11) என்று பதிலளிக்கிறார்.
போவாஸ் ரூத்தை மணந்துகொண்டு, நகோமியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறார் (வச. 4). அவர்களுடைய அந்த திருமணத்தின் மூலம், முற்பிதாவான தாவீது மற்றும் இயேசுகிறிஸ்து அவர்களின் வம்சாவளியில் தோன்றுகின்றனர். ஜெரால்டையும் போவாஸையும் தேவன் பயன்படுத்தி மற்றவர்களின் கண்ணீரை தேவன் துடைப்பார் என்றால், வேதனையில் உள்ளவர்களின் கண்ணீரை துடைக்க தேவன் நம் மூலமாகவும் கிரியை செய்ய முடியும்.
நீங்கள் தயை பெற்றவர்களாகவோ அல்லது மற்றவர்களுக்கு தயை பாராட்டினவர்களாகவோ எப்போது செயல்பட்டிருக்கிறீர்கள்? அதின் விளைவு என்ன?
அன்பான தேவனே, உம்முடைய குமாரனை அனுப்பி என்னை மீட்டெடுத்து, எல்லா தயையிலும் மேன்மையான தயையை எனக்கு பாராட்டியமைக்காய் உமக்கு நன்றி.