திருச்சபையை ஒரு விசேஷ நிகழ்ச்சிக்காக நாங்கள் அலங்கரித்தபோது, அந்தப் பொறுப்பில் இருந்த பெண் எனது அனுபவமின்மையைப் பற்றிக் கூறினார். அவர் சென்ற பிறகு, மற்றொரு பெண்மணி என்னிடம் வந்தார்: “அவரைப் பற்றி கவலைப்படாதே. அவரை “கூ.கி.தே” என அழைக்கிறோம்; அதாவது “கூடுதல் கிருபை தேவை” ” என்றார்.
நான் சிரித்தேன். விரைவில் நான் ஒவ்வொரு சச்சரவின்போதும் அந்த வாக்கிய சுருக்கத்தை பயன்படுத்த ஆரம்பித்தேன். பல வருடங்கள் கழித்து, அதே திருச்சபையில் அமர்ந்து “கூ.கி.தே”வின் இரங்கலுரையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் எவ்வாறு பிறர் காணா வண்ணம் தேவனுக்கு சேவை செய்தார்,, மற்றவர்களுக்கு தாராளமாக கொடுத்தார் என்பதை அச்சபையின் போதகர் பகிர்ந்து கொண்டார். கடந்த காலத்தில் அவரையும் மற்றவர்களையும் கூ.கி.தே என நியாயந்தீர்த்து முத்திரை பதித்து கிசுகிசுத்ததற்காக என்னை மன்னிக்கும்படி தேவனிடம் கேட்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக மற்ற விசுவாசிகளைப்போல் எனக்கும் கூடுதல் கிருபை தேவைப்பட்டது.
எபேசியர் 2ல் அப்போஸ்தலன் பவுல், அனைத்து விசுவாசிகளும் ”சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்” (எபேசியர் 2:3). ஆனால் தேவன் நமக்கு இரட்சிப்பாகிய பரிசை கொடுத்திருக்கிறார், ”ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” (எபேசியர் 2:9) என்கிறார்.
இந்த வாழ்நாள் பயணத்தின்போது நாம் ஒவ்வொரு கணமும் தேவனுக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் நமது குணத்தை மாற்றியமைக்கவும், அதனால் கிறிஸ்துவின் தன்மையை நாம் பிரதிபலிக்கவும் செய்கிறார். ஒவ்வொரு விசுவாசிக்கும் கூடுதல் கிருபை தேவைப்படுகிறது. ஆனால், தேவனுடைய கிருபை போதுமானது என்பதால் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம் (2 கொரிந்தியர் 12:9).
“கூடுதல் கிருபை தேவை” என்று நீங்கள் எப்போது மற்றவர்களை நியாயந்தீர்த்தீர்கள்? இன்று உங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதியில் உங்களுக்கு கிருபை தேவை?
பிதாவாகிய தேவனே, உமது மாபெரும் கிருபையை தாராளமாக அருளியதுபோல், மற்றவர்களுக்கும் மிகுதியாக வழங்க எனக்கு உதவும்.