நீங்கள் அமெரிக்காவில் அமைதியான இடத்தைத் தேடுகிறவர்களென்றால், மினியாபோலிஸ், மினசோட்டாவில் நீங்கள் விரும்பும் அந்த அறை உள்ளது. இவ்வறையானது அனைத்து ஒலிகளிலும் 99.99 சதவீதத்தை உறிஞ்சிக்கொள்கிறது! ஆர்ஃபீல்ட் ஆய்வகங்களின் உலகப் புகழ்பெற்ற எதிரொலியற்ற அந்த அறை “பூமியின் அமைதியான இடம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த சத்தமில்லாத இடத்தை அனுபவிக்க விரும்புபவர்கள், கவனம் சிதறாத வண்ணம் அமர்ந்துகொள்ள வேண்டும். மேலும் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேல் யாரும் அந்த அறையில் இருக்க முடியாது.
இத்தகைய மௌனத்தை பெரும்பாலும் நாம் விரும்ப மாட்டோம். ஆயினும்கூட, இரைச்சலும் அவசரமும் நிறைந்த இந்த உலகில் சிறிது அமைதிக்காக நாம் அனைவரும் சில சமயங்களில் ஏங்குகிறோம். நாம் பார்க்கும் செய்திகளும், நாம் உள்வாங்கும் சமூக ஊடகங்களும் கூட, நம் கவனத்தை சிதறடிக்கும் ஒருவித ஆரவாரமான “இரைச்சலை” நமக்குள் கொண்டு வருகின்றன. எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டும் வார்த்தைகள் மற்றும் படங்கள் நம் மனதில் பதிந்து விடுகின்றன. அவற்றில் நாம் மூழ்கிவிட்டால் தேவனின் சத்தத்தைக் கேட்க முடியாமல் போய்விடும்.
எலியா தீர்க்கதரிசி ஓரேப் பர்வதத்தில் தேவனைச் சந்திக்கச் சென்றபோது, பலத்த, சடுதியான காற்றிலோ, பூகம்பத்திலோ அல்லது நெருப்பிலோ அவரைக் காணவில்லை (1 இராஜாக்கள் 19:11-12). எலியா ஓர் “மெல்லிய சத்தத்தைக்” கேட்கும் வரை, அவர் முகத்தை மூடிக்கொண்டு, “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரை” (வச. 12-14) சந்திப்பதற்காக குகையை விட்டு வெளியேறினார்.
உங்கள் ஆவியும்கூட அமைதலுக்காக ஏங்கலாம், ஆனால் அதைக்காட்டிலும் தேவனின் சத்தத்தை கேட்கவே அவை வாஞ்சிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் அமைதிக்கான ஓர் நேரத்தை ஒதுக்குங்கள். அப்பொழுது தேவனின் ‘மெல்லிய சத்தத்தை’ உங்களால் கேட்க முடியும் (வச. 12).
தேவன் எவ்வாறெல்லாம் தன் பிள்ளைகளுடன் தொடர்பு கொள்கிறார்? அவருடன் தவறாமல் தொடர்புகொள்வது ஏன் இன்றியமையாதது?
அன்பான தந்தையே, இன்று உம்முடன் நான் தொடர்பு கொள்ள, என் இதயத்தையும், மனதையும் அமைதிப்படுத்தும்.