“ஃப்ரோசன் ட்ரீட்” நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி “அண்டர்கவர் பாஸ்” என்ற தொலைக்காட்சித் தொடரில், காசாளர் சீருடை அணிந்தவராக நடித்தார். அவரது செயற்கை முடியும், ஒப்பனையும் அவரின் உண்மையான அடையாளத்தை மறைத்து, ஓர் புதிய பணியாளரைப்போல் தோற்றம் தரவே, தனது நிறுவனத்தின் அங்காடிகளில் ஒன்றில் பணியாற்றினார். தனது நிறுவனத்தில் விஷயங்கள் உண்மையில் எவ்வாறு நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகவே அவர் அவ்வாறு மாறுவேடத்தில் சென்றார். மேலும் அதன் மூலம் அங்காடி எதிர்கொள்ளும் சில சிக்கல்களை அவரால் தீர்க்க முடிந்தது.
நம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்க இயேசு ஓர் “தாழ்மையான நிலையை” (பிலிப்பியர் 2:7) எடுத்தார். அவர் மனிதராகி பூமியில் இருந்து, தேவனைப் பற்றி நமக்குக் கற்பித்தார், இறுதியில் நமது பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் (வச. 8). இந்தப் பலி கிறிஸ்துவின் மனத்தாழ்மையை வெளிப்படுத்தியது. அவர் கீழ்ப்படிதலுடன் தமது ஜீவனை நமது பாவநிவாரன பலியாக கொடுத்தார். அவர் பூமியில் ஓர் மனிதனாக இருந்து, நாம் அனுபவிக்கும் அனைத்தையும் அவரும் அனுபவித்தார்.
இயேசுவை விசுவாசிக்கிறவர்களாகிய நாம், நமது இரட்சகரைப் போலவே “அதே மனப்பான்மையுடன்” இருக்க அழைக்கப்படுகிறோம். குறிப்பாக மற்ற விசுவாசிகளுடனான நமது உறவுகளில் (வ.5) மனத்தாழ்மையை அணிந்துகொள்ள தேவன் நமக்கு உதவுவார் (வ.3). கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டவர்களாயிருந்து (வ.5) மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யத் தயாராக இருக்கும் ஊழியர்களாக வாழ அவர் நம்மை அழைக்கிறார். அவர்களை நேசிக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணச் செய்யவும், தேவன் நம்மை சிறந்த நிலையில் பயன்படுத்துவார்.
மற்றவர்களின் தேவைகளையும், பிரச்சினைகளையும் நீங்கள் எப்படி அன்புடன் கையாள முடியும்? இயேசுவின் மனத்தாழ்மையைப் பின்பற்றுவது என்றால் என்ன?
பரிசுத்த தேவனே, எனக்கான இயேசுவின் தியாகத்திற்காக உமக்கு நன்றி. நான் என் சகோதர, சகோதரிகளுக்கு பணிவுடன் சேவை செய்யும்போது கிறிஸ்துவின் மனநிலையை எனக்குத் தாரும்.