1982 ஆம் ஆண்டில், போதகர் கிறிஸ்டியன் ஃபூரர் ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் செயின்ட் நிக்கோலஸ் தேவாலயத்தில் திங்கட்கிழமை ஜெபக்கூட்டங்களைத் தொடங்கினார். பல ஆண்டுகளாக உலகளாவிய வன்முறை, அடக்குமுறை மற்றும் கிழக்கு ஜெர்மன் ஆட்சியின் நடுவிலும் தேவனிடம் சமாதானம் வேண்டி ஒரு சிலர் கூடி ஜெபித்தனர். கம்யூனிஸ்ட் அதிகாரிகள் தேவாலயங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தபோதிலும், சபை வாசலுக்கு வெளியே வெகுஜனக் கூட்டம் வரும் வரை, அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அக்டோபர் 9, 1989 அன்று, எழுபதாயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்து, அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். எந்த கலவரத்திற்கும் பதிலடி கொடுக்க ஆறாயிரம் கிழக்கு ஜெர்மன் போலீசார் தயாராக இருந்தனர். கூட்டம் அமைதியாக இருந்தது. ஆனால் வரலாற்றாசிரியர்கள் இந்நாளை ஒரு வரலாற்றுச் சிறப்பாகவே கருதுகின்றனர். ஓர் மாதம் கழித்து, பெர்லின் சுவர் இடிந்து விழுந்தது. பெரிய மாற்றம் ஜெபக்கூட்டத்துடன் தொடங்கியது.
நாம் தேவனிடம் திரும்பி, அவருடைய ஞானத்தையும், பலத்தையும் நம்பத் தொடங்கும்போது விஷயங்கள் பெரும்பாலும் மாறவும், மாற்றி அமைக்கப்படவும் தொடங்குகின்றன. இஸ்ரவேலைப் போலவே, “[நம்] துன்பத்தில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது,” நம்முடைய மிக மோசமான இக்கட்டான நிலைகளை, ஆழமாக மாற்றியமைக்கவும், நம்முடைய மிகவும் வேதனையான கேள்விகளுக்கு பதிலளிக்கவும் கூடிய தேவனை நாம் கண்டுகொள்வோம் (சங்கீதம் 107:28). தேவன் “கொந்தளிப்பை அமர்த்துகிறார்”, “அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும்” மாற்றுகிறார் (வச. 29, 35). நாம் யாரிடம் ஜெபிக்கிறோமோ, அவரே நமக்கு விரக்தியிலிருந்து நம்பிக்கையையும், அலங்கோலத்திலிருந்து அழகையும் கொண்டுவருகிறவர்.
ஆனால் தேவன்தான் (அவரது காலத்தில், நம்முடையது அல்ல) மாற்றத்தை ஏற்படுத்துகிறவர். அவர் செய்யும் மறுரூபமாக்கும் பணியில் நாம் எவ்வாறு பங்குகொள்கிறோம் என்பதே ஜெபம்.
தேவன் மாற்றத்தை ஏற்படுத்துவதை நீங்கள் எப்போது கண்டீர்கள்? அவருடைய செயல்களுக்கும், நமது ஜெபங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
தேவனே, எனக்கு உம்முடைய மறுரூபமாக்கும் கிரியை தேவை. உம்மால் மட்டுமே மாற்றக்கூடியதை மாற்றியருளும்.