“ஒவ்வொரு வினாடியும் புனிதமானது” என்பது உணவைத் தயாரிப்பது, துணி துவைப்பது போன்ற பல்வேறு செயல்களுக்கான பிரார்த்தனைகளின் அழகான புத்தகமாகும். அதாவது மீண்டும், மீண்டும் செய்யக்கூடிய பணிகள் அல்லது அவசியமான மற்றும் சாதாரணமாக உணரக்கூடிய பணிகளைக் குறிக்கிறது. இப்பணிகள் சலிப்பூட்டுகிறவைகளாயிருக்கும். இவை எழுத்தாளரான ஜி.கே. செஸ்டெர்டென்னின் வார்த்தைகளை எனக்கு நினைப்பூட்டுகிறது. “உணவுக்கு முன் கிருபை வேண்டும் என்று கேட்கிறீர்கள். அது நல்லதுதான். ஆனால் நான் வர்ணம் தீட்டுவதற்கு முன்னும், நீச்சல் அடிப்பதற்கு முன்னும், வேலி இடுவதற்கு முன்னும், குத்துச்சண்டை போடும் முன்னும், நடக்கும் முன்னும், விளையாடும் முன்னும், நடனமாடும் முன்னும், பேனாவிற்கு மையை ஊற்றும் முன்னும் தேவனுடைய கிருபைக்காக வேண்டுகிறேன்”.
இத்தகைய ஊக்கம் எனது நாளின் செயல்பாடுகள் குறித்த எனது கண்ணோட்டத்தை மாற்றியமைக்கிறது. சில சமயங்களில் ஆவிக்குரிய வாழ்க்கையில், முக்கியமானது, முக்கியமற்றது என இரண்டு வகைகளாக பிரிக்க முற்படுகிறேன். இயேசுவுக்காக வாழத் தெரிந்துகொண்ட கொலோசே மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் அந்தப் பிரிவினையை அழித்தார். அவர் இந்த வார்த்தைகளால் அவர்களை உற்சாகப்படுத்தினார்: ”வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து” (கொலோசெயர் 3:17). இயேசுவின் நாமத்தில் காரியங்களைச் செய்வதென்பது, நாம் அவற்றைச் செய்வது மட்டுமல்லாமல், அதன் மூலம் அவரைக் கனப்படுத்துவதும், அவற்றை நிறைவேற்றுவதற்கு அவருடைய ஆவி நம்மைப் பலப்படுத்துகிறது என்ற உறுதியைக் கொண்டிருப்பதும் ஆகும்.
“நீங்கள் எதைச் செய்தாலும்.” நம் வாழ்வின் அனைத்து சாதாரண செயல்களையும், ஒவ்வொரு நேரமும், தேவ ஆவியால் பலப்படுத்தப்பட்டு, இயேசுவைக் கனப்படுத்தும் விதத்தில் செய்யலாம்.
அன்றாட செயல்களில் உங்கள் கண்ணோட்டத்தை எப்படி மாற்றி அமைக்க முடியும்? உங்கள் நாளின் பணிகளுக்கு நீங்கள் எவ்வாறு தேவனின் ஆவியை நம்பலாம்?
இயேசுவே, இன்று நான் செய்யும் எல்லாவற்றிலும் உம்மைக் கனப்படுத்த உமது ஆவியால் எனக்கு அதிகாரம் தாரும்.