வாலிபர் முகாமில் நடந்த ஓர் வேடிக்கையான விளையாட்டு அது. ஆனால் அவ்விளையாட்டு எங்களுக்கு ஒரு பாடமாகவும் இருந்தது: அயலாரை மாற்றுவதை விட, அவர்களை நேசிக்கக் கற்றுக்கொள்வது. வட்டத்தின் நடுவில் நிற்கும் ஒருவரைத் தவிர, அனைவரும் ஒரு பெரிய வட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். நின்று கொண்டிருந்தவர் அமர்ந்திருந்த ஒருவரிடம், “உன் அயலாரை நேசிக்கிறாயா?” என்று கேட்டார். அமர்ந்திருந்தவர் கேள்விக்கு இரண்டு வழிகளில் பதிலளிக்கலாம்: ஆம் அல்லது இல்லை. அல்லது அவர் விருப்பம்போல் தன் அயலாரை மாற்றியும் கொள்ளலாம்.
நிஜ வாழ்க்கையிலும் நமது “அயலாரை” தேர்வு செய்ய வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் அல்லவா? குறிப்பாக நம்மால் பழக முடியாத உடன் பணியாளர் அல்லது ,உங்களைத் தொந்தரவு செய்யும் வகையில் முரண்பாடான நேரங்களில் முரணான வேலைசெய்யும் பக்கத்து வீட்டுக்காரர். ஆயினும், நாம் அவர்களுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்றபோது, தமக்குச் சொந்தமான மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முக்கியமான அறிவுரைகளை அவர்களுக்கு தேவன் தந்தார். “உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக” (லேவியராகமம் 19:18), இதில் மற்றவர்களைப் பற்றி தவறாக பேசாமல் இருப்பது, அவர்களைப் பற்றி தவறான செய்தியை பரப்பாமல் இருப்பது, அவர்களை நமக்கு சாதகமாக பயன்படுத்தாமல் இருப்பது, அவர்களிடம் ஏதேனும் தவறு இருக்குமாயின் அவர்களிடம் பகை கொள்ளாமல் அதை நேரே அவர்களிடம் சொல்லுவது – இவையாவும் அந்த அறிவுரையில் அடங்கும் (வச. 9-18).
எல்லோரையும் நேசிப்பது கடினம் என்றாலும், இயேசு நமக்குள்ளும், நம் மூலமாகவும் செயல்படும்போது, மற்றவர்களை அன்பாய் நடத்துவது சாத்தியமாகும். நாம் அவருடைய ஜனமென்னும் அடையாளத்தை வெளிப்படுத்தி வாழ முற்படுகையில், அவ்வாறு செய்வதற்கான ஞானத்தையும் திறனையும் தேவன் அருளுவார்.
நீங்கள் பழகுவதற்கு கடினமாக தோன்றும் அயலகத்தார் யார்? அவர்களை எப்படி சிறப்பாக நேசிக்க முடியும்?
தந்தையே, என்னைச் சுற்றியுள்ளவர்களிடமும்; கடினமானவர்களிடமும் உம் அன்பைப் பிரதிபலிக்க எனக்கு உதவும்.