ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் போதனையை நன்கு செவிகொடுத்து கேட்ட அவரது ஓட்டுநர், அவர் பேசிய அனைத்தையும் நன்கு கேட்டுவிட்டு, அவரே சொற்பொழிவாற்றுவதற்கு போதுமான தகவல் இருப்பதாக அறிவித்தார். அப்போது ஐன்ஸ்டீன், அடுத்த கல்லூரியில் சொற்பொழிவாற்றும்போது, அவர்கள் என்னை நேரில் கண்டதில்லை என்பதினால் நாம் இருவரும் ஆள்மாறாட்டம் செய்து உரையாற்றுவோம் என்று ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதில் கேள்வி-பதில் நேரம் வந்தது. அதில் மிகவும் ஆக்ரோஷமான ஒரு கேள்விக்கு, ஓட்டுநர் அந்த நபரைப் பார்த்து, “நீங்கள் ஒரு சிறந்த பேராசிரியர் என்பதை நான் பார்க்கிறேன், ஆனால் என் ஓட்டுநர் கூட பதிலளிக்கக்கூடிய ஒரு எளிய கேள்வியை நீங்கள் கேட்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்று சொல்ல, ஓட்டுநர் வேடத்தில் இருந்த ஐன்ஸ்டீன் அந்த கேள்விக்கு பதிலளித்தாராம். வேடிக்கையான ஆனால் கற்பனையான கதை இங்கே முடிகிறது.

தானியேலும் அவனுடைய மூன்று நண்பர்களும் மிகவும் இக்கட்டான தருணத்தில் சிக்கிக்கொள்கின்றனர். தான் உருவாக்கின பொற்சிலையை அவர்கள் வணங்காவிட்டால், அவர்களை அக்கினி சூளையில் போடுவதாக நேபுகாத்நேச்சார் பயமுறுத்தினான். “உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார்?” (தானியேல் 3:15) என்று கேட்கிறான். தானியேலின் நண்பர்கள் பணிந்துகொள்ள மறுத்ததினால், ஏழு மடங்கு சூடேற்றப்பட்ட அக்கினி சூளையில் அவர்களை தூக்கிப்போட்டான். 

அவர்கள் தனியே செல்லவில்லை. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே ஒரு தூதனாக அவர்களோடு அக்கினியில் உலாவி, அவர்கள் சேதமடையாமல் காத்து, ராஜாவின் கேள்விக்கு மறுக்கமுடியாத வகையில் பதிலளித்தார் (வச. 24-25). அப்போது நேபுகாத்நேச்சார், “உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே” என்று தேவனை துதித்து, “இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான்” (வச. 28-29). 

சில சமயங்களில், சூழ்நிலை நம் கைமீறிப் போவதாக நாம் உணரலாம். ஆனால் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவர்களுக்கு அவர் துணை நிற்கிறார். அவர் நம்மை சுமந்துசெல்வார்.