நான் அதிகமாய் கவலைப்படக்கூடியவன். நான் தனிமையில் வாழக்கூடிய நபர் என்பதினால் அதிகாலை நேரம் என்பது, பொல்லாத எண்ணங்கள் சிந்தையில் நிழலாடும் மிகவும் மோசமான தருணங்கள். எனவே ஹட்சன் டெய்லரின் (சீனாவிற்கான ஒரு பிரிட்டிஷ் மிஷனரி) மேற்கோளை எனது குளியலறை கண்ணாடியில் ஒட்டி வைத்தேன். என் எண்ணங்கள் பாதிக்கப்படும்போது, நான் அதைப் பார்க்க முடியும்: “ஜீவனுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார். அவர் வேதாகமத்தில் பேசியிருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார், வாக்குச்செய்த அனைத்தையும் செய்திருக்கிறார்” என்று அந்த வாசகம் நீளுகிறது.
டெய்லரின் இந்த வார்த்தைகள், பல வருடங்களாக தேவனுடன் நடந்து, அவர் யார் என்பதையும், நோய், வறுமை, தனிமை மற்றும் துக்கத்தின் போது அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. தேவன் நம்பகமானவர் என்பதை அவர் சாதாரணமாய் அறியவில்லை; அவருடைய நம்பகத்தன்மையை அவர் அனுபவித்தார். அவர் தேவனின் வாக்குறுதிகளை நம்பி அவருக்கு கீழ்ப்படிந்ததால், ஆயிரக்கணக்கான சீன மக்கள் இயேசுவுக்கு தங்கள் ஜீவனை அர்ப்பணித்தனர்.
தேவனையும் அவருடைய வழிகளையும் அனுபவிப்பதின் மூலம் தேவன் நம்பகமானவர் என்பதை தாவீது உணர்ந்தார். அவர் தேவனை நல்லவராகவும், இரக்கமுள்ளவராகவும், அவர் வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராகவும் அனுபவித்ததால், சங்கீதம் 145ஐ துதி பாடலாக எழுதினார். நாம் தேவனை நம்பி பின்பற்றும்போது, அவர் தன்னை யார் என்று சொல்லுகிறாரோ அவர் அதுவே என்ற நம்பிக்கைக்கு நாம் பாத்திரவானாகிறோம். அப்போது, தாவீதைப் போல நாமும் தேவனை துதிகளின் மூலமாய் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம் (வச. 10-12).
நான் கவலைப்படும் தருணங்களில், தேவன் உண்மையுள்ளவர் என்பதினால் அவரோடு நடக்கும் நம்முடைய அடிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நம்மை அவர் நடத்தட்டும் (எபிரெயர் 10:23).
சமீப காலமாக நீங்கள் எதைப் பற்றி கவலைப்பட்டீர்கள்? தேவனின் எந்த வாக்குத்தத்தத்தை நீங்கள் கடைப்பிடிக்க முடியும்? ஹட்சன் டெய்லர் மற்றும் தாவீது ராஜாவின் நம்பிக்கை வீண் போகவில்லை என்பதை அறிவது எப்படி உங்களை ஊக்கப்படுத்தி நம்பிக்கையளிக்கிறது?
அன்பான தேவனே, எனக்கு உண்மையாயிருந்து உம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றியதற்காய் உமக்கு நன்றி. ஒவ்வொரு நாளும் உம்மை நம்பி உமக்கு கீழ்ப்படியும்பொருட்டு உம்முடைய உண்மைத்துவத்தை நினைவுகூர எனக்கு உதவிசெய்யும்.