புனித அகஸ்டினின் “அறிக்கைகள்” என்று வெளியிடப்பட்ட அவருடைய சுயசரிதையானது இயேசுவுடனான அவருடைய நீண்ட பயணத்தை பிரதிபலிக்கிறது. ஒரு சமயம், பேரரசரை புகழ்ந்து பேசுவதற்காக அரண்மனைக்குச் சென்று கொண்டிருந்தார். அவர் அரசரைப் பார்த்து புகழ்ந்து பேசும்போது, அவருடைய அந்த முகஸ்துதி வரிகளை கேட்டு குடிபோதையில் இருந்த ஒரு பிச்சைக்காரன் கைதட்டி கேலிசெய்வதைப் பார்த்தார். அந்த குடிபோதையில் இருந்த மனிதன் இப்படிப்பட்ட முகஸ்துதிகள் மூலம் வரும் மேன்மைகளை தன்னுடைய வாழ்க்கையில் பார்த்து பழக்கப்பட்டவன் என்பதை உணர்ந்து, அன்றிலிருந்து உலக வெற்றிகளுக்காகவும் மேன்மைகளுக்காகவும் பிரயாசப்படுவதை நிறுத்திக்கொண்டார்.
ஆகிலும் அவர் இச்சைக்கு அடிமையாயிருந்தார். பாவத்திற்கு அடிமையாயிருக்கும் வரையில் இயேசுவிடத்தில் திரும்பமுடியாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தாலும், விபச்சார பாவத்தில் அவர் தரித்திருந்தார். ஆகையால் அவர் “எனக்கு இச்சையடக்கம் தாரும்… ஆனால் உடனே வேண்டாம்” என்று ஜெபிக்க ஆரம்பித்தாராம்.
அகஸ்டின், போதுமான அளவிற்கு பாவத்திற்கும் இரட்சிப்பிற்கும் இடையில் சிக்கித் தவித்தார். மற்றவர்களுடைய வாழ்க்கையினால் உந்தப்பட்டவராய், ரோமர் 13:13-14ஐ எடுத்து வாசித்தார். “களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும்… உள்ளவர்களாய் நடவாமல்… துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.”
அவருடைய வாழ்க்கையில் மாற்றம் வந்தது. தேவன் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி அகஸ்டினுடைய வாழ்க்கையில் இருந்த இச்சையின் சங்கிலிகளிலிருந்து அவரை விடுவித்து, “தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு…” கொண்டுவந்தார். “அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது” (கொலோசெயர் 1:13-14). அகஸ்டின் ஒரு போதகரானார். ஆனாலும் அவர் இச்சையினால் சோதிக்கப்பட்டார். ஆகிலும் அவ்வாறு சோதிக்கப்படும்போது யாரை நோக்கவேண்டும் என்பதை தற்போது நன்கு அறிந்திருந்தார். அவர் இயேசுவிடம் தஞ்சமடைந்தார். நீங்கள் தஞ்சமடைய ஆயத்தமா?
இயேசுவுக்கு உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க எது தடையாயிருக்கிறது? அதை விட்டுவிட்டால் உங்களுடைய வாழ்க்கை எந்த விதத்தில் மாற்றமடையும் என்று எண்ணுகிறீர்கள்?
தகப்பனே, உமக்கும் எனக்கும் நடுவில் வேறு எதுவும் வராமலிருப்பதாக.