மார்கரெட் அத்தையின் சிக்கன சுபாவம் மிகவும் புகழ்பெற்றது. அவருடைய மரணத்திற்கு பின்னர், அவருடைய மருமகள் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை சீரமைக்கும் சலிப்பான வேலையை தொடங்கினாள். மேசையில் ஒரு டிராயரில் இருந்த பிளாஸ்டிக் பை ஒன்றில் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிறு கயிறுகள் தென்பட்டது. அந்த பிளாஸ்டிக் பையின் மீது ஒட்டியிருந்த லேபிளில், “பயன்படுத்த முடியாத அளவிற்கு சிறிய கயிறுகள்” என்று எழுதப்பட்டிருந்தது.
பயன்படுத்த முடியாத ஒன்றை சேகரித்து வைக்கும்படிக்கு ஒருவரை எது ஊக்கப்படுத்தியது? ஒருவேளை, இந்த நபர் தன்னுடைய வாழ்க்கையில் பற்றாக்குறையை அதிகமாய் அனுபவித்த நபராய் இருந்திருக்கலாம்.
இஸ்ரவேலர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறியபோது, அவர்கள் பாடுகள் நிறைந்த வாழ்க்கையை விட்டு புறப்பட்டனர். ஆனால் அவர்கள் விரைவிலேயே தங்கள் பாதையில் கிரியை செய்த தேவனுடைய அற்புதக் கரத்தை மறந்து, ஆகாரத்திற்காய் முறுமுறுக்கத் துவங்கினர்.
தேவன் அவர்கள் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று விரும்பினார். அவர்களுடைய வனாந்திர வாழ்க்கையில் அவர்களுக்கு வானத்து மன்னாவை புசிக்கக்கொடுத்து, அதை “ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்” (யாத்திராகமம் 16:4) என்று மோசே மூலம் கட்டளையிடுகிறார். ஆனால் ஓய்வு நாளில் மன்னா கொடுக்கப்படாது என்பதினால், ஓய்வுநாளுக்கு முந்தின நாளான ஆறாம் நாளில் மக்கள் இரட்டிப்பாய் சேகரித்துக்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனர் (வச. 5,25). சில இஸ்ரவேலர்கள் அதற்கு கீழ்ப்படிந்தனர். சிலர் கீழ்ப்படியாமல் விளைவை சந்தித்தனர் (வச. 27-28).
தாராளமாய் கிடைக்கும் தருணங்களில், பற்றாக்குறையை மனதில் வைத்து பொருட்களை எடுத்து பதுக்கி வைக்க நாம் தூண்டப்படுவது இயல்பு. அனைத்தையும் நம் கைகளில் எடுப்பது அவசியமில்லை. “பயன்படாத சிறிய கயிறு துண்டுகளையோ” மற்ற பொருட்களையோ நாம் பதுக்கி வைக்கவேண்டிய அவசியமில்லை. “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5) என்று நமக்கு வாக்குபண்ணியிருக்கிற தேவன் மீது நம்முடைய விசுவாசத்தை வைப்போம்.
எந்தெந்த வகையில் நீங்கள் பொருட்களை இச்சிக்க பிரயாசப்படுகிறீர்கள்? கடந்த காலத்தில் தேவன் உங்களுக்கு எந்த விதத்தில் உண்மையுள்ளவராய் வெளிப்பட்டார்?
பிதாவே, உம்முடைய வார்த்தை அடையாளப்படுத்துகிற விதத்தில் உம்மை எடுத்துக்கொள்ளவும், எல்லாவற்றோடும் உம்மை நம்பவும் எனக்கு உதவிசெய்யும்.