ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் ஒரு ரயில் நிலையத்தில் நேர்த்தியாய் உடையணிந்த ஒரு இளைஞன், ஒரு இருக்கையில் அமர்ந்து ரயிலுக்காகக் காத்திருந்தான். அவன் டை கட்டுவதில் சிரமப்பட்டபோது, ஒரு வயதான பெண்மணி தன் கணவரிடம் அவனுக்கு உதவிசெய்யும்படிக்கு கேட்டுக்கொண்டார். அந்த முதியவர் குனிந்து அந்த இளைஞனுக்கு டை முடிச்சு போடுவது எப்படி என்று கற்றுக்கொடுக்க ஆரம்பித்தபோது, யாரோ ஒருவன் மூவரையும் புகைப்படம் எடுத்தான். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானபோது, அதைப் பார்த்த பலர் பலன் எதிர்பாராமல் உதவிசெய்வதின் முக்கியத்துவத்தைக் குறித்த தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டனர்.
மற்றவர்களுக்கு இரக்கம் காண்பித்தல் என்பது கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில், இயேசு நமக்கு செய்த தியாகமான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இது தேவனுடைய அன்பின் பிரதிபலிப்பு. மேலும் “நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே” இயேசு சீஷர்களிடம் விரும்பிய ஒரு காரியம். சகோதரனையோ சகோதரியையோ வெறுப்பதை கொலைபாதகத்திற்கு யோவான் சமமாக்குகிறார் (வச. 15). பின்பு இயேசுவையே அன்பின் கிரியைகளுக்கு அவர் மாதிரியாக்குகிறார் (வச. 16).
தன்னலமற்ற அன்பை நிரூபிக்க அதிகப்படியான தியாகத்தை செய்திருக்கவேண்டிய அவசியமில்லை. மாறாக, தேவ சாயலில் படைக்கப்பட்ட சக மனிதனுடைய தேவையை நம்முடைய தேவைக்கு மேலாக வைப்பதே தன்னலமற்ற அன்பாகும். மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யும் வாய்ப்பு கிட்டும் சில முக்கியமான தருணங்களில் தன்னலமற்ற அன்பை பிரதிபலிக்கக்கூடும். நம்முடைய சுகமான சுயநல வட்டத்தை விட்டு வெளியேறி, நாம் செய்ய வேண்டிய அவசியமாய் தெரியாத உதவிகளையும் மற்றவர்களுக்கு செய்யும்போது, நாம் அவர்களை இயேசு நேசிப்பதுபோல் நேசிக்கத் துவங்குகிறோம் என்று அர்த்தம்.
சுயநலமில்லாத அன்பை யாரிடத்திலிருந்து நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்? இந்த வாரத்தில் யாரை சுயநலமில்லாமல் நேசிக்கப்போகிறீர்கள்?
அன்பான பிதாவே, நீர் எங்கெல்லாம் என்னை அனுப்புகிறீரோ, அங்கெல்லாம் தன்னலம் இல்லாத உம்முடைய அன்பையும் இரக்கத்தையும் செயல்படுத்தும் இருதயத்தை எனக்குத் தாரும்.