ஒரு நாசக்கார கும்பலால் கடத்தப்பட்ட பதினேழு மிஷனரிகளைப் பற்றி 2021ஆம் செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. அவர்களுடைய மீட்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அந்தக் குழுவை (குழந்தைகள் உட்பட) கொலை செய்துவிடுவதாக அந்த கும்பல் மிரட்டியது. ஆனால் ஆச்சரியமான வகையில், பிணையக் கைதிகளாய் சிக்கியிருந்த அனைத்து மிஷனரிகளும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடத்தை வந்து சேர்ந்த மாத்திரத்தில், அவர்களை சிறைபிடித்தவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினர்: “அன்பின் மன்னிக்கும் சக்தியானது, வன்முறையின் வெறுப்பின் சக்தியைக் காட்டிலும் வலிமைவாய்ந்தது என்பதை இயேசு வார்த்தையின் மூலமாகவும் அவருடைய வாழ்க்கையின் மூலமாகவும் எங்களுக்குக் கற்பித்திருக்கிறார். எனவே, நாங்கள் உங்களை மனப்பூர்வமாய் மன்னிக்கிறோம்” என்பதே அந்த செய்தி.
மன்னிப்பு சக்தி வாய்ந்தது என்பதை இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். அவர் “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்” (மத்தேயு 6:14) என்று கூறுகிறார். பின்பாக, எத்தனை முறை மன்னிக்கவேண்டும் என்னும் பேதுருவின் கேள்விக்கு இயேசு பதிலளிக்கும்போது, “ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்” (18:22) என்று இயேசு சொல்லுகிறார். மேலும் சிலுவையில், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) என்று தெய்வீக மன்னிப்பை இயேசு வெளிப்படுத்திக் காண்பித்தார்.
இருதரப்பினரும் மனப்பூர்வமாய் காயமாற்றப்பட்டு, ஒப்புரவாகும்போதே மன்னிப்பானது முழுமையடைகிறது. நம்மை பாதிப்படையச் செய்த செயல்களை நினைவிலிருந்து அகற்றி, மற்றவர்களை காயப்படுத்தாமல் உறவுகளை எவ்விதம் பேணவேண்டும் என்பதைக் குறித்த பகுத்தறிவை பெறுவது என்பது தேவனுடைய அன்பையும் வல்லமையையும் பிரதிபலிக்கும் ஆதாரங்களாய் வாழக்கையை மாற்றும். தேவநாம மகிமைக்காய், மற்றவர்களை மன்னிக்கும் வழிகளை ஆராய்வோம்.
மன்னிப்பது எப்போது கடினமாய் தெரிகிறது? மன்னிப்பை அருளுவதற்கு பரிசுத்த ஆவியானவரை எந்தவிதத்தில் நம்பப்போகிறீர்கள்?
இயேசுவே, உம்முடைய வல்லமையையும் கிருபையையும் வெளிப்படுத்துவிதமாக, யாருக்கு என்னுடைய மன்னிப்பு அவசியப்படுகிறதோ அவர்களை சந்திக்க எனக்கு கிருபை செய்யும்.