எங்கள் சபை அதின் முதல் கட்டிடத்தை கட்டியபோது, கட்டிடத்தின் உட்புற அலங்காரம் முடிவடைவதற்கு முன்பு, சுவர்களிலும் (கட்டிடத்தின் சட்டத்தை ஆதரிக்கும் உலர்வாலுக்குப் பின்னால் உள்ள செங்குத்து விட்டங்கள்) மற்றும் கான்கிரீட் தளங்களிலும் மக்கள் நன்றி தெரிவிக்கும் வாக்கியங்களை எழுதினார்கள். அந்த சட்டங்களை விலக்கிப் பார்த்தால் அவைகள் நன்றாய் தெரியும். நிறைய வேத வசனங்கள், மற்றும் “நீர் மிகவும் நல்லவர்” என்பது போன்ற துதி வாக்கியங்களும் ஜெபங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. “சவால்களுக்கு மத்தியில் தேவன் எங்களுக்கு எவ்வளவு நல்லவராய் இருந்தார் என்பதை அடுத்த தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக நாங்கள் அந்த சாட்சியத்தை விட்டுச்சென்றோம்” என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தேவன் நமக்கு செய்த நன்மைகளை நாம் நினைவுகூர்ந்து அதை மற்றவர்களுக்கும் அறிவிக்க வேண்டும். ஏசாயா தீர்க்கதரிசி, “கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும்… கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன்” (ஏசாயா 63:7) என்று சொல்லுகிறார். மேலும் “அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” (வச. 9) என்று சரித்திரத்தில் தன் ஜனத்தின் மீதான தேவனுடைய அன்பை அவர் தெரியப்படுத்துகிறார். அந்த அதிகாரத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது, இஸ்ரவேலர்கள் இன்னும் நெருக்கத்தில் இருப்பதையும், தேவன் அவர்களுக்காக இடைபடவேண்டும் என்ற தீர்க்கதரிசியின் எதிர்பார்ப்பையும் நாம் காணமுடியும்.
இக்கட்டான தருணங்களில் தேவன் நமக்கு காண்பித்த இரக்கத்தை நினைவுகூரலாம். சவாலான வாழ்க்கைத் தருணங்களை நாம் சந்திக்கக்கூடும். ஆனால் அவர் இரக்கங்களுக்கு முடிவில்லை. அவர் நமக்கு செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து நன்றியுள்ள இருதயத்தோடு அவரை நோக்கிப் பார்க்கும்போது, அவர் நம்முடைய துதிகளுக்குப் பாத்திரர் என்னும் உண்மையை நாம் அறிந்துகொள்ளக்கூடும்.
தேவன் உங்களுக்கு கடந்த காலத்தில் காண்பித்த இரக்கம் என்ன? அவைகளுக்கு நன்றிசொல்லுதல், சவாலான சூழ்நிலைகளுக்குள் கடந்துபோகும்போது உங்களுக்கு எந்த விதத்தில் உதவியாயிருக்கிறது?
பிதாவே, நீர் அனைத்து சிருஷ்டிப்பின் மீதும் சர்வ ஆளுகையுள்ளவராயிருக்கிறீர். உம்முடைய மாறாத கிருபைக்காகவும், நீர் என்னோடு எப்போதும் இருப்பதற்காகவும் உம்மைத் துதிக்கிறேன்.