இயேசுவின் சிலுவை தியாகத்தை நினைவுகூரும் அந்த புனித வாரத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் தியாகமான அன்பை நினைவுகூர்ந்து அவருடைய உயிர்த்தெழுதலை கொண்டாடும்வேளையில், தென்மேற்கு பிரான்சில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கி சூடு நடத்தி  அங்கிருந்த இருவரைக் கொன்றான். பேச்சு வார்த்தைக்கு பின்னர், அவன் தன் கைவசம் பிடித்துவைத்திருந்த மக்களை விடுவித்தான்;. ஆனால் அவனுடைய பாதுகாப்புக்காக அதில் ஒரு பெண்ணை மட்டும் பினையக்கைதியாய் பிடித்து வைத்திருந்தான். ஆபத்தை அறிந்த போலீஸ் அதிகாரி அர்னாட் பெல்ட்ரேம், எதிர்பாராத ஒன்றைச் செய்தார். அவர் அவன் பிடித்து வைத்திருந்த பெண்ணுக்கு பதிலாக, தன்னை பிடித்து வைத்துக்கொள்ளும்படிக்கு முன்வந்தார். தீவிரவாதியும் அதை ஒப்புக்கொண்டு அவளை விடுவித்தான். ஆனால் அதற்கடுத்து நடந்த சண்டையில், பெல்ட்ரேம் காயமடைந்து பின்னர் இறந்துபோனார்.

அந்த போலீஸ் அதிகாரியை நன்கு அறிந்த போதகர் ஒருவர், அவருடைய அந்த துணிச்சலான செய்கையை தேவன் மீதான விசுவாசத்திற்கு ஒப்பிட்டு யோவான் 15:13ஐ மேற்கோள் காண்பிக்கிறார்: “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.” பூமியில் தன்னுடைய கடைசிபோஜனத்தை புசித்த இயேசு இவ்வார்த்தைகளை தன்னுடைய சீஷர்களைப் பார்த்து கூறினார். “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும்” (வச. 12) என்று போதித்த அவர், ஒருவர் தன் சிநேகிதருக்காக ஜீவனைக் கொடுக்க துணிவதே அந்த மெய்யான அன்பு என்று கூறுகிறார் (வச. 13). அதைத்தான் அடுத்த நாளில் அவர் செய்தார். நம்மை பாவத்திலிருந்து மீட்கும்பொருட்டு, அவர் சிலுவையில் தன் ஜீவனையே ஒப்புக்கொடுத்தார்.

அர்னாட் பெல்ட்ரேம் செய்த அந்த துணிச்சலான தியாகத்தை செய்வதற்கு நமக்கு அழைப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் தேவனுடைய அன்பில் நிலைத்திருக்கும்போது, நம்முடைய மாம்ச திட்டங்களை விட்டுவிட்டு, அவருடைய அந்த சிறந்த அன்பின் மேன்மையை மற்றவர்களுக்கு அறிவிக்க பிரயாசப்படுவோம்.