சிறுவயதில் நானும் என் சகோதரியும் அடிக்கடி மோதிக் கொண்டேயிருப்போம். அதில் ஒரு குறிப்பிட்ட தருணம் என் நினைவில் இன்னும் இருக்கிறது. நாங்கள் இருவரும் சத்தத்தை உயர்த்தி ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தவேளையில், அவள் சொன்ன ஒரு காரியம் என்னால் மன்னிக்கவே முடியாத வகையில் இருந்தது. எங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பகைமையைக் கண்ட என் பாட்டி, “தேவன் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரேயொரு சகோதரியைத் தான் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பரிவு காண்பிக்க பழக வேண்டும்” என்று ஒருவரையொருவர் நேசிக்க வேண்டிய எங்களது பொறுப்பை எங்களுக்கு எடுத்துச் சொன்னார். எங்களை அன்பினாலும் புரிதலினாலும் நிரப்பும்பொருட்டு தேவனிடத்தில் நாங்கள் ஜெபித்தபோது, ஒருவரையொருவர் நாங்கள் எந்தவிதத்தில் காயப்படுத்தினோம் என்பதையும் எப்படி மன்னிக்கவேண்டும் என்பதையும் தேவன் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.
கோபத்தையும் கசப்பையும் உள்ளுக்குள் வைத்திருப்பது சாதாரணமாய் தெரியலாம். ஆனால் தேவனின் துணையோடு நம்முடைய எரிச்சலின் ஆவியை விட்டுவிட்டு, தேவன் கொடுக்கும் சமாதானத்தை நாம் உணரவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (எபேசியர் 4:31). இந்த மாம்சத்தின் உணர்வுகளுக்கு அடிமைப்படாமல், கிறிஸ்துவை மாதிரியாய் வைத்து, ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னித்ததுபோல, நாமும் ஒருவருக்கொருவர் மன்னிப்பை செயல்படுத்துவோம் (வச. 32). நமக்கு மன்னிப்பது கடினமாய் தோன்றினால், அவர் ஒவ்வொரு நாளும் நமக்கு அருளும் கிருபையை நாம் சார்ந்துகொள்வோம். நாம் எத்தனை முறை விழுந்தாலும், அவர் கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை (புலம்பல் 3:22). தேவன் நம்முடைய இருதயங்களில் இருக்கும் கசப்பை நீக்குவதற்கு நமக்கு உதவிசெய்வார். அதினால் நாம் நம்பிக்கையோடு அவருடைய அன்பிற்கு உட்பட்டவர்களாய் நிலைத்திருப்போம்.
யார் உங்களை எப்போது காயப்படுத்தியிருக்கின்றனர்? அந்த தருணங்களில் நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பரலோகப் பிதாவே, நீர் என்னுடைய வாழ்க்கையில் வைத்த நபர்களுக்காய் உமக்கு நன்றி. எனக்கு நேசிக்கவும், மன்னிக்கவும் கூடிய இருதயத்தை தாரும்.