பதிமூன்றே வயது நிரம்பிய டேஏவியன் மற்றவர்களுக்கு சேவை செய்யும் சவாலை மேற்கொண்டான். கோடை விடுமுறையின் போது, தன்னுடைய ஐம்பது புல்வெளிகளை இலவசமாக வெட்டும்படி குழந்தைகளுக்கு அழைப்புக் கொடுத்த ஒரு மனிதனைப் பற்றிய கதையை அவனும் அவனது அம்மாவும் கேட்டிருக்கிறார்கள். இராணுவ வீரர்கள், ஒற்றை அம்மாக்கள், ஊனமுற்றவர்கள், அல்லது உதவி தேவைப்படும் எவருக்கும் உதவுவதே அவர்களின் நோக்கம். அந்த புல்வெளிகளின் சொந்தக்காரர், வேலையின் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு நன்மை செய்வதின் அவசியத்தையும் அவர்களுக்கு விளங்கச்செய்தார். கோடையின் வெயில் சுட்டெரிக்கும் போதும், மற்றவர்களுக்கு சேவை செய்வதை விரும்பிய டீவியோன் அந்த சவாலை நேர்த்தியாய் செய்து முடித்தார்.
மற்றவர்களுக்கு சேவை செய்யும் சவால் கிறிஸ்தவர்களுக்கும் உண்டு. இயேசு மரிப்பதற்கு முந்தின நாள் இரவில், அவர் சீஷர்களோடு பந்தியிருந்தார் (யோவான் 13:1-2). அவர் கடந்துபோகப்போகிற உபத்திரம் மற்றும் மரணம் என்னும் பாதையைக் குறித்து அவர் நன்கு அறிந்திருந்த போதிலும், அவர் ஒரு துண்டை எடுத்து தன்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டு சீஷர்களின் பாதங்களை கழுவினார் (வச. 3-5). மேலும் “ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்” என்று அவர்களிடம் வலியுறுத்தினார் (வச. 14).
நம்முடைய தாழ்மையான மாதிரியாகிய இயேசு மக்களிடம் கரிசனை காண்பித்தார். அவர் குருடருக்கு பார்வையும், வியாதியஸ்தருக்கு சுகமும் கொடுத்து இராஜ்யத்தின் நற்செய்தியை போதித்து, தன் சிநேகிதருக்காக தன்னுடைய ஜீவனையும் கொடுத்தார். கிறிஸ்து உங்களை நேசிப்பதால், இந்த வாரத்தில் யாருக்கு சேவை செய்யவேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று அவரிடத்தில் கேளுங்கள்.
தேவனுடைய அன்பையும் இரக்கத்தையும் நீங்கள் எப்படி புரிந்திருக்கிறீர்கள்? உங்களுடைய வரத்தையும் திறமையையும் பயன்படுத்தி இந்த வாரத்தில் யாருக்கு உதவப்போகிறீர்கள்?
அன்பான தேவனே, நீர் என் மீது வைத்திருக்கும் அன்பை மற்றவர்கள் மீது நான் செலுத்த எனக்கு கற்றுத் தாரும்.