நடிகரும், தற்காப்புக் கலைஞருமான சக், தனது தாயாரின் நூறாவது பிறந்தநாளில், தனது மனமாற்றத்திற்கு அவர் எவ்வளவு உதவியாக இருந்தார் என்பதைப் பகிர்ந்துகொண்டு அவரது தாயைக் கௌரவித்தார். “அம்மா விடாமுயற்சி மற்றும் நம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு” என்று அவர் எழுதினார். மகா பஞ்சகாலத்தில், தன் மூன்று ஆண் குழந்தைகளைத் தானே பராமரித்தாள்; இரண்டு வாழ்க்கைத் துணைவர்கள், ஒரு மகன், ஒரு வளர்ப்பு மகன் மற்றும் பேரக்குழந்தைகளின் மரணங்களைச் சகித்தாள்; மற்றும் பல அறுவை சிகிச்சைகளை தாங்கினாள். “சிறிதோ, பெரிதோ [அவள்] என் வாழ்நாள் முழுவதும் எனக்காக ஜெபித்தாள்.” என்றவர் மேலும், “திரைத்துறையில் என்னை அர்ப்பணிக்கையிலும், அவள் என் வெற்றி மற்றும் இரட்சிப்புக்காக வீட்டில் ஜெபித்தாள்.” என்றும், ” நான் எவ்வாறு இருக்கவேண்டுமோ, இருக்க கூடுமோ அவ்வாறே என்னைத் தேவன் மாற்றியதற்காக என் அம்மாவுக்கு நன்றி.” என்று முடித்தார்.

சக்கின் தாயின் பிரார்த்தனைகள் அவருக்கு இரட்சிப்பையும், தேவனுக்குப் பயந்த மனைவியையும் கண்டறிய உதவியது. அவள் தன் மகனுக்காக ஊக்கமாக ஜெபித்தாள், தேவன் அவளுடைய ஜெபங்களைக் கேட்டார். எப்பொழுதும் நமது ஜெபங்களுக்கு நாம் விரும்பும் விதத்தில் பதில் கிடைப்பதில்லை, எனவே ஜெபத்தை மந்திரக்கோலாகப் பயன்படுத்த முடியாது. இருப்பினும் யாக்கோபு, “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.” (5:16) என்று நமக்கு உறுதியளிக்கிறார். இந்த அம்மாவை போலவே, நோயுற்றவர்களுக்காகவும், பிரச்சனையில் இருப்பவர்களுக்காகவும் நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் (வவ. 13-15). அவளைப் போலவே, நாம் ஜெபத்தின் மூலம் தேவனுடன் தொடர்பு கொள்ளும்போது, உற்சாகத்தையும் அமைதியையும், ஆவியானவர் செயல்படுகிறார் என்ற உறுதியையும் கண்டுகொள்கிறோம்.

உங்கள் வாழ்க்கையிலுள்ள யாருக்காவது ஒருவருக்கு இரட்சிப்பு அல்லது குணமடைதல் அல்லது உதவி தேவையா? விசுவாசத்துடன் உங்கள் ஜெபங்களைத் தேவனிடம் கொண்டுசெல்லுங்கள். அவர் கேட்கிறார்.