எனது ஆறாம் வகுப்பு பேரன் மோகனுக்கு சில கடினமான கணக்கு வீட்டுப்பாடங்களில் நான் உதவி செய்து கொண்டிருந்தபோது, பொறியியலாளராக வேண்டும் என்ற தனது கனவை என்னிடம் கூறினான். அவனது பாடத்தில் உள்ள அச்சு ரேகைகளை உபயோகிக்கக் கற்றுக்கொண்ட பின்னர் அவன், “நான் எப்போது இந்த பொருட்களைப் பயன்படுத்தப் போகிறேன்?” என்றான்.

என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை, “சரி, மோகன் நீ ஒரு பொறியியலாளராக மாறினால், நீ பயன்படுத்தப் போகும் பொருட்கள் இவைதான்” என்றேன். கணிதத்திற்கும் அவன் எதிர்பார்க்கும் எதிர்காலத்திற்கும் உள்ள தொடர்பை அவன் உணரவில்லை.

சில சமயங்களில் நாம் வேதத்தை அப்படித்தான் பார்க்கிறோம். நாம் பிரசங்கங்களைக் கேட்கும்போதும், வேதத்தின் சில பகுதிகளைப் படிக்கும்போதும், “இதெல்லாம் எனக்குத் தேவையா?” என்று நாம் நினைக்கலாம். சங்கீதக்காரன் தாவீதிடம் சில பதில்கள் உண்டு. வேதாகமத்தில் காணப்படும் தேவனின் சத்தியங்கள் “ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதும்”, “பேதையை ஞானியாக்குகிறதும்” மற்றும் “இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதும்” (சங்கீதம் 19:7-8) போன்ற ஆற்றலுள்ளவை என்றார். சங்கீதம் 19ல் குறிப்பிடப்பட்டுள்ள வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களில் (மேலும் வேதாகமத்தின் அனைத்து பகுதிகளிலும்) காணப்படும் வேதத்தின் ஞானம், நம்மை ஆவியானவரின் வழிநடத்துதலை அனுதினமும் நம்பியிருக்க நமக்கு உதவுகிறது (நீதிமொழிகள் 2:6).

மேலும் வேதவசனங்கள் இல்லாவிடில் அவரை அனுபவிக்கவும், அவருடைய அன்பையும் வழிகளையும் நன்றாக அறிந்துகொள்ளவும் தேவன் நமக்கு அளித்திருக்கும் இன்றியமையாத வழியை நாம் இழந்துவிடுவோம். வேதத்தை ஏன் படிக்க வேண்டும்? ஏனென்றால், “கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.” (சங்கீதம் 19:8).