ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனை கட்டுரையில், பிரெண்டா என்ற வாசகருக்கு அவர் பதிலளிக்கையில், அவள் தனது இலட்சியத்தை அடைய மேற்கொண்ட முயற்சிகள் அவளை அதிருப்தி அடையச் செய்ததாக புலம்பினாள். அதற்கான மருத்துவரின் பதில் அறிவுமழுங்கியதாக இருந்தது. மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கப் படைக்கப்படவில்லை, “உயிரோடிருந்து இனப்பெருக்கம் செய்வதற்கும் மட்டுமே” என்று அவர் கூறினார். திருப்தி எனும் கைக்கெட்டாத பட்டாம்பூச்சியைத் துரத்துவது நமது சாபம் என்றார். அதை எப்போதும் பிடிக்க முடியாது என்று அவர் மேலும் கூறினார்.
மனநல மருத்துவரின் வார்த்தைகளைப் படித்து பிரெண்டா எப்படி உணர்ந்திருப்பாள்? அதற்குப் பதிலாகச் சங்கீதம் 131ஐப் படித்தால் அவள் எவ்வளவு வித்தியாசமாக உணருவாள்? என்று யோசித்தேன். அதன் வார்த்தைகளில், திருப்தியை எவ்வாறு கண்டறிவது என்பதை நமக்கு தாவீது காட்டுகிறார். அவர் மனத்தாழ்மையோடு ஆரம்பிக்கிறார், தனது ராஜரீகமான நோக்கங்களை ஒதுக்கி வைக்கிறார். மேலும் எது முக்கியமெனும் வாழ்க்கையின் ஆழமான கேள்விகளோடு போராடிக்கொண்டிருந்த அவர், அவற்றையும் ஒதுக்கி வைக்கிறார் (வச. 1). பின்னர் அவர் தேவனுக்கு முன்பாக தனது இதயத்தை அமரப்பண்ணினார் (வச. 2), எதிர்காலத்தை அவரது கைகளில் ஒப்படைக்கிறார் (வச. 3). அதின் விளைவு அற்புதமானது: “ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல இருக்கிறது” என்று அவர் கூறுகிறார். அதாவது “நான் திருப்தியாக இருக்கிறேன்” (வச. 2).
இதுபோன்ற நமது நொறுங்கிய உலகில், திருப்தி என்பது சில நேரங்களில் எட்டாக் கனியாக இருக்கும். பிலிப்பியர் 4:11-13 இல், அப்போஸ்தலன் பவுல் மனநிறைவைக் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று என்று கூறினார். ஆனால் நாம் “உயிர்வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும்” மட்டுமே படைக்கப்பட்டுள்ளோம் என்று நம்பினால், மனநிறைவு நிச்சயமாகப் பிடிக்க எட்டாக் கனியாகவே இருக்கும். தாவீது நமக்கு மற்றொரு வழியைக் காட்டுகிறார்: தேவனின் சமுகத்தில் அமைதியாக இளைப்பாறுதலின் மூலம் மனநிறைவைப் பெறுவதே அவ்வழி.
நீங்கள் எப்போது மிகவும் திருப்தி அடைகிறீர்கள்? இன்று தேவனுடன் அமைதியாக இருக்க அவசரமில்லாத நேரத்தை எப்படி ஒதுக்குவீர்கள்?
அன்புள்ள தேவனே, என் உண்மையான நிறைவாகிய உம்மில் நான் ஆழமாக இளைப்பாறுகிறேன்.