ஃபிரெட்ரிக் பிரவுன் என்பவரின் விறுவிறுப்பான சிறுகதையான “நாக்” இல், அவர் எழுதினார், “பூமியின் கடைசி மனிதன் ஒரு அறையில் தனியாக அமர்ந்திருந்தான். கதவு தட்டும் சத்தம் கேட்டது”. ஐயோ! அது யாராக இருக்கலாம், அவர்களுக்கு என்ன வேண்டும்? என்ன மர்மமான ஜந்து வந்தது? மனிதன் தனியாக இல்லையே.
நாமும் இல்லை. லவோதிக்கேயாவில் உள்ள சபையினர், கதவு தட்டப்படுவதைக் கேட்டனர் (வெளி.3:20). இயற்கைக்கு அப்பாற்பட்டவராக அவர்களிடம் வந்தது யார்? அவருடைய பெயர் இயேசு. முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிவர் (1:17). அவருடைய கண்கள் நெருப்பைப் போல ஜுவாலித்தது, “அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது” (வச.16). அவருடைய நெருங்கிய நண்பனான யோவான், அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தார் (வச.17). கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசமானது தேவனுக்குப் பயப்படுவதிலிருந்து தொடங்குகிறது.
நாம் தனியாக இல்லை, இது ஆறுதல் அளிக்கிறது. இயேசு, அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய் (எபிரெயர் 1:3) இருக்கிறார். ஆனாலும் கிறிஸ்து தம்முடைய வலிமையை நம்மை அழிக்க அல்ல, நம்மை நேசிக்கவே பயன்படுத்துகிறார். அவருடைய அழைப்பைக் கேளுங்கள், “ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் உள்ளே பிரவேசித்து அவனுடன் போஜனம் பண்ணுவேன், அவனும் என்னுடன் போஜனம்பண்ணுவான்” (வெளி.3:20). வாசலில் நிற்பது யாரோ? என்கிற பயத்துடன் நமது விசுவாசம் துவங்கி, அது வரவேற்பிலும் ஆற தழுவுவதிலும் முடிகிறது. நாம் பூமியில் கடைசி நபராக இருந்தாலும், எப்பொழுதும் நம்முடன் இருப்பேன் என்று இயேசு உறுதியளிக்கிறார். தேவனுக்கு நன்றி, நாம் தனியாக இல்லை.
கிறிஸ்துவின் வல்லமையையும், அன்பையும் நம்மால் ஏன் பிரிக்க இயலாது? இரண்டும் ஏன் மிக முக்கியமானவை?
இயேசுவே, நான் உம்மை என் இதயத்திலும் வாழ்க்கையிலும் வரவேற்கிறேன்.