ராஜ் தனது இளமை பருவத்தில் இயேசுவை இரட்சகராக நம்பினார், ஆனால் விரைவில், அவர் நம்பிக்கையிலிருந்து விலகி, தேவனை விட்டு விலகி வாழ்க்கையை நடத்தினார். ஒரு நாள், இயேசுவுடனான தனது உறவைப் புதுப்பித்து மீண்டும் தேவாலயத்திற்குச் செல்ல அவர் முடிவெடுத்தார். இத்தனை ஆண்டுகளாக சபைக்கு வராததால் ஒரு பெண்ணால் திட்டப்பட்டார். பல வருடங்களாக அலைந்து திரிந்த ராஜின் அவமானத்தையும் குற்ற உணர்வையும் இந்தத் திட்டு மேலும் கூட்டியது. நான் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவனா என அவர் சந்தேகித்தார். சீமோன் பேதுரு இயேசுவை மறுதலித்தான் (லூக்கா 22:34, 60-61) அதே வேளையில் அவனைத் தேவன் மீட்டெடுத்ததை (யோவான் 21:15-17) அவர் நினைவு கூர்ந்தார்.
பேதுரு தண்டனையை எதிர்பார்த்திருந்த போதிலும், அவர் பெற்றதெல்லாம் மன்னிப்பு மற்றும் மறுசீரமைப்பு மட்டுமே. இயேசு, பேதுரு தன்னை மறுதலித்ததைக் குறிப்பிடவில்லை, மாறாக கிறிஸ்துவின் மீதான தனது அன்பை மீண்டும் உறுதிப்படுத்தவும் அவரைப் பின்பற்றுபவர்களைக் கவனித்துக்கொள்ளவும் அவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார் (யோவான் 21:15-17). பேதுரு அவரை மறுதலிக்கும் முன், இயேசு சொன்ன வார்த்தைகள் நிறைவேறிக் கொண்டிருந்தன: ” நீ குணப்பட்டபின்பு உன் சகோதரை ஸ்திரப்படுத்து” (லூக்கா 22:32).
ராஜ், அதே மன்னிப்பு மற்றும் மறுசீரமைப்புக்காகத் தேவனிடம் கேட்டார், இன்று அவர் இயேசுவுடன் நெருக்கமாக நடப்பது மட்டுமல்லாமல் ஒரு தேவாலயத்தில் சேவைசெய்து மற்ற விசுவாசிகளையும் ஆதரிக்கிறார். நாம் தேவனிடமிருந்து எவ்வளவு தூரம் விலகியிருந்தாலும், அவர் நம்மை மன்னிக்கவும், நம்மை மீண்டும் வரவேற்கவும் மட்டுமல்ல, நம்மை மீட்டெடுக்கவும் தயாராக இருக்கிறார், அதனால் நாம் அவரை நேசிக்கவும், சேவை செய்யவும், மகிமைப்படுத்தவும் முடியும். நாம் ஒருபோதும் தேவனிடமிருந்து வெகுதொலைவில் இல்லை. அவருடைய அன்பான கரங்கள் நமக்காகவே திறந்திருக்கிறது.
தேவனிடம் திரும்புவதில் உங்களுக்கு என்ன பயம் ? அவருடைய மன்னிக்கும் இதயத்தை அறிந்துகொள்வது, அவரிடம் திரும்புவதற்கு உங்களுக்கு எப்படி உதவும்?
தந்தையே, உம்முடைய முடிவில்லாத கருணைக்காகவும், பொறுமைக்காகவும் உமக்கு நன்றி. உமது நித்திய அன்பில் நான் நம்பிக்கை வைத்ததற்காக உமக்கு நன்றி.