எனது கல்லூரிக்கும், பாலைவனத்திலிருந்த என் வீட்டுக்குமான  சாலை வெறுமையாக இருந்ததால், நான் எனது வாகனத்தை சற்று வேகமாக ஓரிருமுறை ஓட்டினேன். காரணம் அந்த சாலை நீண்ட, நெடிய சாலை. முதலில் நெடுஞ்சாலை காவல்துறையிடமிருந்து எனக்கு ஒரு எச்சரிக்கை வந்தது. பின்னர் அபராத சீட்டு வந்தது. என் வாகனத்தின் வேகத்தை நான் மறுபடியும் குறைக்காததால், இரண்டாவது தடவையாக, அதே இடத்தில் நான் பிடிபட்டேன்‌.                         

செவிசாய்க்க மறுப்பதால், விபரீதமான பின்விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். இத்தகைய மோசமான உதாரணத்தை, நல்லவனாய் மற்றும் உண்மையான ராஜாவாயிருந்த யோசியாவின் வாழ்க்கையில் நாம் காண முடியும். எகிப்தின் ராஜாவாகிய நேகோ, அசீரியர்களுக்கு உதவுவதற்காக பாபிலோனுக்கு விரோதமாகப் படையெடுத்து வந்தபோது, யோசியா அவனுக்கு விரோதமாக வந்தான். நேகோ, யோசியாவிடம் ஸ்தானாபதிகளை அனுப்பி ,”நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல என்னோடே யுத்தம் பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்க வேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடை செய்வதை விட்டுவிடும் என்று சொல்லச் சொன்னான்” (வ.21). தேவனே நேகோவை அனுப்பியிருந்தார். யோசியா அதற்கு செவிகொடாமல் மெகிதோவின் பள்ளத்தாக்கிலே யுத்தம் பண்ணுவதற்கு வந்தான் (வ.22). யோசியா மிகவும் காயப்பட்டு மரணமடைந்தான், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் அவனுக்காக துக்கம் கொண்டாடினார்கள் (வ.24).

தேவனை நேசித்த யோசியா, அவருக்கும், பிறர் மூலம் தனக்குக் கிடைத்த அவரின் ஞானத்திற்கும் செவிசாய்க்க நேரம் ஒதுக்காததால், தன் சுயவழிகளை நம்புவது நல்லதல்ல என்பதைக் கண்டுகொண்டான். நம்மை நாம் எப்பொழுதும் சோதித்துப் பார்க்கவும், தேவ ஞானத்தைப் பெற்றுக் கொள்ளவும் தேவன்தாமே நமக்குத் தாழ்மையைத் தந்து உதவுவாராக.