கீதாவின் குடும்ப வாழ்க்கை நிலையற்றது, பதினான்கு வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, வேலை தேடி நண்பர்களுடன் வாழ்ந்தாள். அன்பு மற்றும் பாதுகாப்பிற்காக ஏங்கியவள், பின்னர் அவளுக்குப் போதைப்பொருளை அறிமுகப்படுத்தியவனுடன் சென்றாள். அவளுடைய வழக்கமான குடிப்பழக்கத்துடன் இதுவும் சேர்ந்தது. ஆனால் உறவும் போதைப் பொருட்களும் அவளது ஏக்கங்களை பூர்த்தி செய்யவில்லை. அவள் தேடிக்கொண்டே இருந்தாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவளுடன் ஜெபிக்க முன்வந்த இயேசுவின் விசுவாசிகளை அவள் சந்தித்தாள். சில மாதங்களுக்குப் பிறகு, அன்பின் தாகத்தைத் தணிக்கும் இயேசுவை அவள் இறுதியாகக் கண்டாள்.
கிணற்றடியில் இயேசு தண்ணீருக்காக அணுகிய சமாரியப் பெண்ணின் தாகமும் தணிந்தது. பகல் வெப்பத்தில் அவள் அங்கே இருந்தாள் (யோவான் 4:5-7) அவளுடைய பல கணவர்களின் கதை மற்றும் தற்போதைய தவறான உறவு (வவ. 17-18) குறித்து மற்ற பெண்களின் பார்வை மற்றும் வதந்திகளைத் தவிர்ப்பதற்காக இருக்கலாம். இயேசு அவளை அணுகி அவளிடம் தண்ணீர் கேட்டபோது, அவர் அன்றைய சமூக மரபுகளை உடைத்தார். காரணம் அவர் ஒரு யூத போதகர், பொதுவாக ஒரு சமாரியப் பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்க மாட்டார். ஆனால் அவளை நித்திய ஜீவனுக்கு இட்டுச் செல்லும் ஜீவத்தண்ணீரை பரிசாகக் கொடுக்க விரும்பினார் (வ. 10). அவள் தாகத்தைத் தீர்க்க விரும்பினார்.
இயேசுவை நம் இரட்சகராக ஏற்றுக்கொள்கையில், நாமும் இந்த ஜீவத் தண்ணீரைக் குடிக்கிறோம். அவரைப் பின்தொடரும்படி மற்றவர்களை அழைத்து ஜீவத்தண்ணீரை பகிர்ந்து கொள்ளலாம்.
கிணற்றருகே பெண்ணிடம் இயேசு தண்ணீர் கேட்டபோது, அவள் எப்படி உணர்ந்தாள் என்று நினைக்கிறீர்கள்? உங்களுக்கு அவருடைய ஜீவத் தண்ணீரைப் பெறுவது என்பது என்ன பொருளை தருகின்றது?
பிதாவாகிய தேவனே, தாகமுள்ள யாவரையும் தண்ணீர் அண்டை வந்து குடிக்கும்படி நீர் வரவேற்கிறீர். உமது ஜீவத்தண்ணீரினால் என் தாகத்தைத் தீர்த்தருளும்.