அருகுன் என்பது மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு சிறிய பட்டணம். அதன் பழங்குடி மக்கள் ஏழு வகையான குலங்களைச் சேர்ந்தவர்கள். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அருகுனுக்குச் சுவிசேஷம் அறிவிக்கப்படுகையில், அங்குப் பழிக்குப் பழிவாங்கும் நடைமுறை இருந்தது. 2015 ஆம் ஆண்டில் இனச்சண்டைகள் அதிகரித்தன, மேலும் ஒரு கொலை நடந்தபோது, குற்றவாளியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைப் பதிலுக்குக் கொலை செய்யப்பட வேண்டியிருந்தது.
ஆனால் 2016 இன் ஆரம்பத்தில் வியத்தகு காரியம் ஒன்று நடந்தது. அருகுன் மக்கள் ஜெபத்தில் தேவனைத் தேடத் தொடங்கினர். மனந்திரும்புதல், பின்னர் வெகுஜன ஞானஸ்நானம், பின்னர் எழுப்புதல் நகரம் முழுவதும் பரவத் தொடங்கியது. மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் தெருக்களில் நடனமாடினர். பழிவாங்குவதற்குப் பதிலாகக் கொலையான நபரின் குடும்பம், கொலைசெய்த குலத்தை மன்னித்தது. விரைவில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 1,000 பேர் தேவாலயத்திலிருந்தனர். அது வெறும் 1,300 பேர் மட்டுமே உள்ள ஒரு பட்டணம்!
எசேக்கியாவின் நாட்களில் ஜனங்கள் மகிழ்ச்சியுடன் தேவனிடம் திரும்பியதைப் போல (2 நாளாகமம் 30), ஆயிரக்கணக்கானவர்கள் மனந்திரும்பிய பெந்தெகொஸ்தே நாளைப்போல (அப்போஸ்தலர் 2:38-47) பல எழுப்புதல்களை வேதத்தில் காண்கிறோம். எழுப்புதல் என்பது தேவனின் செயலாக இருந்தாலும், அவர் திட்டமிட்ட காலத்தில் நிறைவேற்றப்பட்டாலும், அதற்கு முந்தியதாக ஜெபம் இருந்ததை வரலாறு காட்டுகிறது. “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்” (2 நாளாகமம் 7:14) என்று தேவன் சாலொமோனிடம் கூறினார்.
அருகுன் மக்கள் கண்டுகொண்டது போல், எழுப்புதல் ஒரு நகரத்திற்கு மகிழ்ச்சியையும் நல்லிணக்கத்தையும் தருகிறது. நமது சொந்த நகரங்களுக்கு இத்தகைய மாற்றம் எவ்வளவு தேவை! தகப்பனே, எங்களுக்கும் எழுப்புதல் அருள்வீராக.
எழுப்புதலுக்கு "சூத்திரம்" ஒன்றும் இல்லை என்றாலும், அதற்கு எது உதவும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எழுப்புதல் வரும்படிக்கு இன்று நீங்கள் தேவனுக்கு எவ்வாறு செவிசாய்ப்பீர்கள்?
அன்புள்ள தகப்பனே, தயவுசெய்து என்னில் தொடங்கி எங்கள் பகுதிக்கு எழுப்புதலைத் தாரும்.