பாஸ்டர் வாரன், தமது தேவாலயத்தில் ஒரு நபர் தம் மனைவி மற்றும் குடும்பத்தைக் கைவிட்டார் என்று கேள்விப்பட்டபோது, அவரோடு பேசும்படி தற்செயலாக அந்த மனிதரைச் சந்திக்க உதவுமாறு தேவனிடம் கேட்டார். தேவன் செய்தார்! வாரன் ஒர் உணவகத்திற்குள் நுழைந்தபோது, அருகிலுள்ள சாவடியில் அந்த மனிதரைக் கண்டார். “பசியோடிருக்கும் எனக்கும் இடம் உண்டா?” என்று அவரிடம் கேட்டார், சீக்கீரமாக அவர்கள் ஆழமாகப் பகிர்ந்து கொண்டு ஒன்றாக ஜெபித்தனர்.
எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலம் தேவன் தமது மந்தையை மேய்ப்பேன் என்று கூறியது போல; ஒரு போதகராக, வாரன் தமது தேவாலயத்தில் உள்ளவர்களுக்கு ஒரு மேய்ப்பனாகச் செயல்பட்டார். தேவன் தம்முடைய சிதறிய ஆடுகளைத் தேடி, அவற்றை மீட்டு, ஒன்று சேர்ப்பதாக வாக்களித்தார் (எசேக்கியேல் 34:12-13). “அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்” என்றும், “காணாமற்போனதைத்தேடி துரத்துண்டதைத் திரும்பக்கொண்டு (வருவேன்)” என்றும், “எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்” என்றும் சொன்னார் (வ. 14–16). தம் ஜனங்களின் மீதான தேவனின் அன்பு இந்த ஒவ்வொரு உருவகத்திலும் எதிரொலிக்கிறது. எசேக்கியேலின் வார்த்தைகள் தேவனின் எதிர்கால செயல்களை எதிர்நோக்கியிருந்தாலும், அவை தேவனின் நித்திய இதயத்தையும் மேய்ப்பனாக வெளிப்படப்போகும் இயேசுவையும் பிரதிபலிக்கின்றன.
நம்முடைய சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தேவன் நம் ஒவ்வொருவரையும் அணுகி, நம்மை மீட்டு, நல்ல மேய்ச்சலில் அடைக்கலம் தருகிறார். ஆடுகளுக்காகத் தம்முடைய உயிரைக் கொடுக்கிற நல்ல மேய்ப்பரை நாம் பின்பற்ற வேண்டும் என்று அவர் ஏங்குகிறார் (பார்க்க யோவான் 10:14-15).
நல்ல மேய்ப்பரான இயேசு உங்களை எப்படிக் கவனித்துக்கொள்கிறார்? நீங்கள் வலுப்படுத்த விரும்பும் உங்கள் பலவீனம் அல்லது பராமரிப்புத் தேவைப்படும் உங்கள் காயங்களை அவரிடம் எப்படி ஒப்புக்கொடுப்பீர்கள்?
அன்புள்ள தேவனே, நான் வழிதவறி அலைந்தாலும் நீர் என்னை நேசிக்கிறீர். உமது அன்பையும் அக்கறையையும் நான் பெறுவதற்கு, உமது ஆட்டுத் தொழுவத்தில் எப்போதும் இருக்க எனக்கு உதவும்.