இங்கிலாந்தில் உள்ள ஒரு இளைஞரிடமிருந்து எனக்கு மின்னஞ்சல் வந்தது, அவரது தந்தை (அறுபத்து மூன்று வயது மட்டுமே) ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக அந்த மகன் விளக்கினார். நாங்கள் சந்திக்கவில்லை என்றாலும், அவருடைய அப்பாவின் வேலையும் என்னுடைய வேலையும் பல ஒற்றுமைகளைக் கொண்டிருந்தன. மகன், தன் தந்தையை உற்சாகப்படுத்த முயன்று, ஊக்கமூட்டும் செய்தி மற்றும் ஜெபத்துடன் ஒரு காணொளியை அனுப்பச் சொன்னார். ஆழ்ந்த உணர்ச்சியுடன், நான் ஒரு சிறு செய்தியையும், குணமடைய ஒரு ஜெபத்தையும் பதிவு செய்தேன். அவருடைய அப்பா அந்த காணொளியைப் பார்த்து உற்சாகமடைந்தார் என்று என்னிடம் கூறப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் இறந்துவிட்டார் என்று எனக்கு மற்றொரு மின்னஞ்சல் வந்தது. அவர் தம் மனைவியின் கையைப் பிடித்தவாறே தம் இறுதி மூச்சை விட்டார்.
என் இதயம் உடைந்தது. அத்தகைய அன்பு, அத்தகைய இழப்பு. அந்த குடும்பம் மிக விரைவில் கணவனையும் தந்தையையும் இழந்தது. ஆயினும், துக்கப்படுபவர்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று இயேசு வலியுறுத்துவதைக் கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது: “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்” என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 5:4). இயேசு துன்பமும் துக்கமும் நல்லது என்று சொல்லவில்லை, மாறாக, தேவனின் கிருபையும் கருணையும் மிகவும் தேவைப்படுபவர்கள் மீது ஊற்றப்படுகிறதாகச் சொல்கிறார். மரணம் அல்லது தங்கள் சொந்த பாவத்தால் நிலைகுலைந்து போகிறவர்களுக்குத் தேவனின் கண்காணிப்பும் ஆறுதலும் மிகவும் தேவை. “அவர்கள் ஆறுதலடைவார்கள்” (வச. 4) என்று நமக்கு வாக்களிக்கிறார்.
தேவன் தம்முடைய அன்பான பிள்ளைகளாகிய நம்மை நோக்கி அடியெடுத்து வைக்கிறார் (வ. 9). அவர் நம் கண்ணீரில் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
உங்கள் வாழ்விலும் மற்றவர்களின் வாழ்விலும் எந்தெந்த இடங்களில் துயரத்தை எதிர்கொள்கிறீர்கள்? இந்த துக்கத்தை நீங்கள் பார்க்கும் விதத்தை இயேசுவின் ஆசீர்வாதம் எப்படி மாற்றுகிறது?
தேவனே, நான் துக்கத்திலும் சோகத்திலும் மூழ்கி இருக்கிறேன். கண்ணீரில் கூட உமது ஆசீர்வாதத்தை அனுபவிக்க எனக்கு உதவும்.