ஜனவரி 15, 1919 அன்று, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், மூல சர்க்கரை பாகை ஏற்றிச் செல்லும் ஒரு டேங்கர் வாகனம் வெடித்தது. 75 லட்சம் லிட்டர் மூல சர்க்கரை பாகு, பதினைந்து அடி அலையாய் 30 மைல் வேகத்தில் தெருவில் பாய்ந்து, ரயில் வண்டிகள், கட்டிடங்கள், மக்கள் மற்றும் விலங்குகளை மூழ்கடித்தது. இந்த மூல சர்க்கரை பாகு அந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அன்று 21 பேரின் உயிரைக் குடித்து, 150 பேருக்கு மேலானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த மூல சர்க்கரைப் பாகைப் போன்று, சில நல்ல விஷயங்கள் கூட நம்மை எதிர்பாராத விதமாய் முழ்கடிக்கலாம். தேவன் இஸ்ரவேலருக்கு வாக்குப்பண்ணிய தேசத்திற்குள் பிரவேசிக்கும் முன்பு, மோசே அவர்களைப் பார்த்து, தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது அது தங்களுடைய சாமர்த்தியத்தினால் வந்தது என்று சொல்லவேண்டாம் என்று எச்சரிக்கிறார்: “நீ புசித்துத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி… உன் இருதயம் மேட்டிமையடையாமலும்… உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்” இருக்கும் படிக்கும் இந்த ஐசுவரியத்திற்கு அவர்களின் சாமர்த்தியம் காரணம் என்று சொல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கிறார். அதற்கு பதிலாக, “உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக… ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்” (உபாகமம் 8:12-14, 17-18) என்று அறிவுறுத்துகிறார்.
நம்முடைய சரீர ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதார தேவைகள் போன்ற அனைத்து காரியங்களும் தேவனுடைய கரத்தினால் அருளப்பட்ட ஈவுகள். நாம் கடினமாக உழைத்து சம்பாதித்தாலும், அவரே நம்மை தாங்குகிறவர். திறந்த கைகளோடு நம்முடைய ஆசீர்வாதத்தை பற்றிக்கொண்டு, நம் மீதான அவருடைய இரக்கங்களுக்காய் அவரை துதிப்போம்.
தேவனிடத்திலிருந்து வந்த எந்த தயவுக்காய் இன்று அவருக்கு நன்றி செலுத்த தூண்டப்படுகிறீர்கள்? நீங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களைக் கொண்டு இன்று யாருக்கு உதவிசெய்யப் போகிறீர்கள்?
என்னை ஒவ்வொரு நொடிப்பொழுதும் தாங்குவதால் உமக்கு நன்றி தகப்பனே. உம்முடைய தயவை நான் மற்றவர்களுக்கு பிரஸ்தாபப்படுத்துவதற்கு அதை நான் புரிந்துகொள்ள எனக்கு கிருபை தாரும்.