அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்க வானொலியின் செய்தி பத்திரிக்கையாளர் பால் ஹார்வியின் குரல் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானது. வாரத்தில் ஆறு நாட்களும் அவர் சுவாரஸ்யத்துடன், “செய்தி என்னவென்று உங்களுக்குத் தெரியும், ஒரு நிமிடத்தில் நீங்கள் மீதமுள்ள கதையைக் கேட்கப் போகிறீர்கள்” என்று கூறுவது வழக்கம். ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு, அவர் நன்கு அறியப்பட்ட நபரின் அதிகம் அறியப்படாத கதையைச் சொல்வார். ஆனால் அந்த குறிப்பிட்ட நபரின் பெயரையோ அல்லது அவரைக் குறித்த சுவாரஸ்யமான தகவலையோ மறைத்து வைத்து, “இப்போது உங்களுக்குத் தெரியும் . . . மீதமுள்ள கதை” என்று கூறி வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டி மகிழ்விப்பார்.
அப்போஸ்தலர் யோவானின் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தைக் குறித்த தரிசனத்தில் அதேபோன்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய கதை சோகமாய் துவங்குகிறது. வரலாறு எதை நோக்கி பயணிக்கிறது என்பதை வானத்திலும் பூமியிலும் சிருஷ்டிக்கப்பட்ட எந்த ஜீவனாலும் உரைக்க முடியவில்லை என்பதனால் அவருடைய கண்ணீரை அவரால் நிறுத்தமுடியவில்லை (வெளி. 4:1; 5:1-4). பின்பு நம்பிக்கையை அளிக்கும் யூதா கோத்திர ராஜசிங்கத்தின் சத்தத்தைக் கேட்கிறார் (வச. 5). ஆனால் யோவான் பார்க்கும்போது, ஒரு வெற்றிபெற்ற சிங்கத்தை பார்ப்பதற்கு பதிலாக, அடிக்கப்படுகிற ஆட்டுக்குட்டியைப் பார்க்கிறார் (வச. 5-6). கர்த்தருடைய சிங்காசனத்தைச் சுற்றிலும் கொண்டாட்ட அலைகள் வெடித்தது. இருபத்தி நான்கு மூப்பர்களும், வானத்திலும் பூமியிலுமுள்ள எண்ணற்ற தேவதூதர் சேனைகளும் இணைந்து தேவனை மகிமைப்படுத்தின (வச. 8-14).
சிலுவையிலறையப்பட்ட இந்த இரட்சகரே அனைத்து சிருஷ்டிகளின் நம்பிக்கையும், தேவனுக்கு மகிமையும், நம்முடைய மீதமிருக்கும் வாழ்க்கைக் கதையாகவும் இருப்பார் என்று யார் தான் கற்பனை செய்திருப்பார்கள்!
இயேசு கொடுக்கும் நம்பிக்கையை அவசியப்படுத்தும் எந்த விதமான பயங்களும் கவலைகளும் உங்களை அமிழ்த்துகிறது? அவரை ஜெயங்கொள்ளுகிற சிங்கமாகவும் அடிக்கப்படுகிற ஆட்டுக்குட்டியாகவும் கருதுவது எவ்விதம் அவரை ஆராதிக்க உங்களுக்கு உதவுகிறது?
சர்வ வல்லமையுள்ள தேவனே, சகல வல்லமையும் துதியும் அன்பும் உமக்கே சொந்தம்.