குழுவினர் விவாதிக்கவேண்டிய நாவலைக் குறித்து புத்தக கழகத் தலைவர் சொன்ன மாத்திரத்தில், அறையின் அமைதி மறைந்து சலசலப்பு ஏற்படத் துவங்கியது. என் சிநேகிதி ஜோன் உன்னிப்பாக படித்தாள். ஆனால் அந்த நாவலின் முக்கிய திருப்பத்தை அடையாளம் காண அவளால் இயலாமல்போனது. கடைசியில் பார்த்தால், அவள் அதே தலைப்பு கொண்ட வேறொரு புத்தகத்தை வாசித்திருக்கிறாள் என்பது தெரியவந்தது. அவள் தவறான புத்தகத்தை ஆர்வத்தோடு படித்து மகிழ்ந்தாலும், சரியான புத்தகத்தை படித்த மற்ற குழுவினரோடு விவாதத்தில் இணைய அவளால் இயலாமல் போனது.
கொரிந்திய திருச்சபை விசுவாசிகள் “வேறொரு” இயேசுவை விசுவாசிப்பதை அப்போஸ்தலனாகிய பவுல் விரும்பவில்லை. கள்ளப் போதகர்கள் திருச்சபையில் ஊடுருவி தவறான இயேசுவை அவர்களுக்கு போதித்திருந்தால், அந்த பொய்யை நீங்கள் நம்பியிருப்பீர்கள் என்று அவர்களை பவுல் எச்சரிக்கிறார் (2 கொரிந்தியர் 11:3-4).
இந்த கள்ளப் போதகர்களின் போதனைகளை பவுல் கண்டித்தார். அவர் கொரிந்திய திருச்சபைக்கு எழுதிய முதல் நிருபத்தில், வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கிறிஸ்துவைக் குறித்து அவர் விளக்கினார். இந்த இயேசுவே “நமது பாவக்களுக்காக மரித்து… மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து… பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்,” இறுதியில் பவுலுக்கும் தரிசமானார் (1 கொரிந்தியர் 15:3-8). இந்த இயேசு தம்முடைய தெய்வீகத்தை நிரூபிக்கும்பொருட்டு கன்னி மரியாளின் மூலம் இப்பூமியில் அவதரித்து, இம்மானுவேல் (தேவன் நம்மோடு) என்று பெயரிடப்பட்டார் (மத்தேயு 1:20-23).
இது நீங்கள் அறிந்த இயேசுவைப்போல் இருக்கிறதல்லவா? அவரைக் குறித்து வேதத்தில் சொல்லப்பட்ட சத்தியங்கள் அனைத்தையும் புரிந்து ஏற்றுக்கொள்வது என்பது பரலோகத்திற்கு செல்லும் பாதையில் நாம் சரியாய் நடக்கிறோம் என்பதற்கான ஆதாரம்.
நீங்கள் இயேசுவைக் குறித்த சத்தியத்தை விசுவாசிக்கிறீர்கள் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? வேதம் போதிக்கிற இயேசுவையே நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்பதை எதை ஆய்வு செய்வதன் மூலம் அறிந்துகொள்வீர்கள்?
அன்பான தேவனே, உம்முடைய சத்தியத்தின் வெளிச்சத்தில் நடக்க எனக்கு உதவிசெய்யும்.