தன்னுடைய பதினாறாம் வயதில், கொக்கெய்ன் என்னும் போதை மருத்தை விற்றதற்காய் லுய்ஸ் ரோட்ரிகெஸ் ஏற்கனவே சிறைக்கு சென்றிருக்கிறான். தற்போது, கொலை முயற்சிக்காய் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டு ஆயுள் தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறான். அவனுடைய குற்றமனசாட்சியில் தேவன் அவனோடு இடைபட்டார். சிறைக்கம்பிகளுக்கு இடையில் இருக்கும்போது, தன் சிறுபிராயத்தில் தன்னை தவறாமல் திருச்சபைக்கு கூட்டிச்சென்ற தன்னுடைய தாயாரின் செய்கையை நினைவுகூர்ந்தான். தேவன் அவனுடைய இருதயத்தில் கிரியை செய்வதை உணர்ந்தான். லுய்ஸ் தன்னுடைய பாவத்தை விட்டு மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொண்டான்.
அப்போஸ்தலர் நடபடிகளில், பவுல் என்று பின்நாட்களில் அறியப்பட்ட சவுல் என்னும் வைராக்கியமான மனிதனைக் குறித்து பார்க்கமுடியும். அவன் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்தான் (அப்போஸ்தலர் 9:1). ஸ்தேவானைக் கொலை செய்த கூட்டத்தின் தலைவனாயிருந்திருக்கிறான் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறது (7:58). சவுலின் இந்த மனசாட்சியோடு தேவன் இடைபடுகிறார். தமஸ்குவுக்கு போகும் வழியில், சவுலின் கண்கள் குருடாக்கப்பட்டு, இயேசு அவனிடம் “நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்” (9:4) என்று கேட்டார். அதற்கு சவுல், “ஆண்டவரே, நீர் யார்” (வச. 5) என்றான். அதுவே அவனுடைய புதிய வாழ்க்கையின் துவக்கம். அவன் இயேசுவை நாடி வந்தான்.
லுய்ஸ் ரோட்ரிகெஸ் ஆயுள் தண்டனைக்கு இடையில் பரோலில் வெளிவந்தான். அதிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் சென்ட்ரல் அமெரிக்காவிலும் இருக்கக்கூடிய சிறைச்சாலைகளில் சுவிசேஷ ஊழியங்களில் ஈடுபடத் துவங்கினான்.
நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் மோசமான காரியங்களிலிருந்து தேவன் நம்மை விடுவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் நம்முடைய இதயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி நம் மனசாட்சியோடு இடைபடுகிறார். இதுவே நம் பாவங்களில் இருந்து மனந்திரும்பி இயேசுவண்டை வருவதற்கான தருணம்.
நீங்கள் என்ன குற்ற மனசாட்சியில் இருக்கிறீர்கள் அல்லது இருந்திருக்கிறீர்கள்? தேவன் மீண்டும் உங்களை அவரிடமாய் இழுத்துக்கொள்ள விரும்பியதை நீங்கள் எவ்விதம் உணர்ந்தீர்கள்?
இயேசுவே, நான் உம்மை விட்டு விலகிவிட்டேன். ஆகிலும் நீர் என்னுடைய இருதயத்தை உம்மிடமாய் இழுக்கிறதை நான் உணர்கிறேன். என்னுடைய பாவங்களை மன்னிக்கும்படி நான் ஜெபிக்கிறேன்.