இராணுவத்தில் ஒரு வீரர் எதிரிகளல்லாத தனது சொந்த படைகளால் எதிர்பாராதவிதமாகத் தாக்கப்படுவதை “நண்பர்களின் தாக்குதல்” என்றழைப்பர். ராணுவத்தில் இது எதிர்பாராதவிதமாக நடக்கலாம், ஆனால் நமது சொந்த வாழ்வில் சிலசமயம் “நண்பர்களின் தாக்குதல்கள்” திட்டமிட்டே நிகழ்கின்றன. மற்ற கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் நம்மைக்குறித்து கடினமான, பொய்யான காரியங்களைக் கூறுகையில்; நம்முடைய இருதயம் ஈட்டிகளாலும், அம்புகளாலும் பிளக்கப்பட்டதைப்போல உணருகிறோம்.
இப்போது இதைக் கற்பனை செய்துபாருங்கள். நீங்கள் இயேசுவின் கரங்களில் இருக்கிறீர்கள், ஒரு தகப்பன் தன் பிள்ளையைச் சுமப்பதுபோல அவர் உங்களை ஏந்தி, தமது இருதயத்தினருகே உங்களை வைத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இருக்கும் உங்கள்மீது யாராயினும் அம்பு எய்யவோ அல்லது ஈட்டியால் துளைக்கவோ முயன்றால் (வேதாகம நாட்களில் நடப்பதுபோல) உங்கள் இதயத்தில் பாயும் அம்புகளும் ஈட்டிகளும், அவருடைய இதயத்திலும் பாயுமல்லவா? அந்த அநீதியாலும் வேதனையாலும், உங்கள் இதயத்தைத் துளைத்த ஈட்டிகளையும், அம்புகளையும் பிடுங்கியெடுத்து, எதிர்த்தாக்குதல் நடத்த நீங்கள் விழையலாம். ஆனால் அதை நீங்கள் செய்ய மறுக்கையில், உங்கள் இதயத்தையும் இயேசுவின் இதயத்தையும் துளைத்த அதே அம்போ, ஈட்டியோ உங்கள் இதயத்தை அவரோடே இணைக்கிறது. உங்கள் பிணைப்பு ஆழமாகிறது.
எனவே அடுத்தமுறை உங்களை யாராவது தவறாக, இழிவாக அல்லது அவதூறாகப் பேசினால், அதற்காகத் தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். ஏனெனில் இயேசுவின் இருதயத்தோடு நீங்கள் நெருங்கும் வாய்ப்பு அது. மேலும் உங்களைக் காயப்படுத்தி வேதனைப்படுத்துபவருக்காக ஜெபியுங்கள்.
உங்கள் தற்போதைய சூழ்நிலையில் உங்களைத் துளைக்கும் சில அம்புகள் யாவை? இயேசு உங்கள் இதயத்தைக் குணமாக்க அவரோடு எவ்வாறு ஒத்துழைப்பீர்கள்?
தேவனே, நான் கடந்துபோகும் அனைத்திலும் உம்மை காணும் கண்களை எனக்குத் தாரும்.