“அன்பான தேவனே, உம்முடைய மென்மையான திருத்தத்திற்கு நன்றி,” என் தோள்கள் சரிந்த நிலையில், அந்தக் கடினமான வார்த்தைகளை முனுமுனுத்தேன். நான் மிகவும் திமிர்பிடித்தவனாக இருந்தேன். எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியும் என்று எண்ணினேன். மாதக்கணக்கில், என்னுடைய தொழிலில் வெற்றியடைந்து வந்தேன். இதினால் குவிந்த பாராட்டுகள் எனது திறமைகளை நம்புவதற்கும் தேவனின் வழிநடத்துதலை நிராகரிப்பதற்கும் என்னைத் தூண்டின. நான் நினைத்தது போல் நான் புத்திசாலி இல்லை என்பதை உணர எனக்கு ஒரு சவாலான சூழ்நிலை அவசியப்பட்டது. தேவனுடைய உதவி எனக்கு தேவையில்லை என்று என்னை நம்பவைத்து, என்னுடைய பெருமை மிக்க இருதயம் என்னை ஏமாற்றிவிட்டது.
ஏதோம் என்ற பலம்வாய்ந்த ராஜ்யம் அதன் பெருமைக்காக தேவனுடைய சிட்சையை அனுபவித்தது. மலைப்பாங்கான தேசத்தில் அமைந்திருக்கும் இந்த ஏதோம் தேசத்தின் நிலப்பரப்பு, இயல்பாகவே ஒரு பாதுகாப்பு அரணாக அமைந்திருந்தது (ஒபதியா 1:3). அதே நேரத்தில் ஏதோம் செல்வ செழிப்பு மிகுந்த தேசமாகவும், முக்கிய வர்த்தக சாலையிலும் அமைந்திருந்தது. அத்துடன் பண்டைய உலகத்தின் அரிய பொக்கிஷமாய் கருதப்பட்ட தாமிரம் அதிகம் கிடைக்கும் இடமாகவும் இருந்தது. நன்மைகள் அதிகம் நிறைந்த தேசமாய் இருந்ததினால், பெருமையும் அதிகமாகவே இருந்தது. ஏதோம் இஸ்ரவேலை ஒடுக்கினாலும், தங்களுடைய இராஜ்யம் வெல்ல முடியாதது என்று அதின் குடிமக்கள் நம்பினர் (வச. 10-14). ஆனால் தேவன் ஒபதியா தீர்க்கதரிசியின் மூலம் ஏதோம் மீதான தன் நியாயத்தீர்ப்பை அறிவிக்கிறார். ஏதோமுக்கு விரோதமாக புறஜாதி தேசங்கள் எழும்பும். ஒரு காலத்தில் பலம்வாய்ந்த இராஜ்யமாய் இருந்த ஏதோம், பாதுகாப்பற்றதாகவும் தாழ்த்தப்படவும் போகிறது (வச. 1-2).
தேவனில்லாமல் நம்முடைய கண்போன போக்கில் நம் வாழ்க்கையை வாழலாம் என்று நம் பெருமை நம்மைத் தூண்டுகிறது. அது நம்மை அதிகாரம், திருத்தம், மற்றும் பெலவீனம் ஆகியவற்றிற்கு செவிகொடுக்காமல் இருக்கச் செய்கிறது. ஆனால் தேவன் அவருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தும்படி அழைக்கிறார் (1 பேதுரு 5:6). நாம் பெருமையிலிருந்து விலகி மனந்திரும்புதலைத் தேர்ந்தெடுக்கும்போது, தேவன் அவரை முழுமையாக நம்புவதற்கு நமக்கு வழிகாட்டுவார்.
உங்கள் வாழ்க்கையின் ஆசீர்வாதங்கள் பெருமைக்கு காரணமானால் என்ன நடக்கும்? பெருமை உங்களை எப்படி ஏமாற்றும்?
பிதாவே, பெருமையிலிருந்து என்னைக் காத்தருளும். எனக்கு ஒரு தாழ்மையான இருதயத்தை தயவாய் அருளும்.