தாராள மனப்பான்மைக்கும் மகிழ்ச்சிக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். தங்கள் பணத்தையும் நேரத்தையும் மற்றவர்களுக்கு கொடுப்பவர்கள், அப்படி செய்யாதவர்களை விட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒரு உளவியலாளர், “கொடுப்பதை ஒரு மனிதாபிமான கடமையாக நினைப்பதை விட்டுவிட்டு, அதை மகிழ்ச்சியின் ஆதாரமாக கருதத் தொடங்குவோம்” என்று கூறுகிறார்.
கொடுப்பது நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பது உண்மையென்றாலும், நம்முடைய மகிழ்ச்சியை இலக்காய் வைத்து நாம் கொடுக்கிறோமா? என்று கேள்வியெழும்புகிறது. நம்மை மகிழ்விக்கக்கூடியவர்களிடத்தில் மட்டும் நம்முடைய தயாள குணத்தை பிரதிபலித்தால், நமது உதவி தேவைப்படும் கடினமான சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு என்ன செய்வது?
கொடுக்கும் இந்த குணாதிசயத்தை வேதம் இன்னொரு கோணத்தில் மகிழ்ச்சியோடு தொடர்புபடுத்துகிறது. தேவாலயத்தைக் கட்டுவதற்குத் தன் சொந்தச் செல்வத்தைக் கொடுத்த பிறகு, தாவீது ராஜா இஸ்ரவேலரையும் நன்கொடை அளிக்க வலியுறுத்தினான் (1 நாளாகமம் 29:1-5). ஜனங்கள் தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த கற்கள் என்று மகிழ்ச்சியுடன் கொடுக்க முன்வந்தனர் (வச. 6-8). ஆனால் அவர்களின் மகிழ்ச்சி என்ன என்பதை கவனியுங்கள்: “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்” (வச. 9). நம்முடைய சுய மகிழ்ச்சிக்காய் கொடுக்கும்படிக்கு வேதம் ஒருபோதும் நமக்கு கட்டளையிடவில்லை. ஆனால் ஒரு தேவையைப் பூர்த்திசெய்ய மனப்பூர்வமாகவும் முழுமனதுடன் கொடுக்க உற்சாகப்படுத்துகிறது. மகிழ்ச்சி அதைத் தொடர்கிறது.
நிர்வாகத் தேவைகளை விட சுவிசேஷ தேவைக்காய் நிதி திரட்டுவது எளிது என்பது மிஷனரிகளுக்கு தெரியும். ஏனென்றால் ஊழியப்பணிக்காக கொடுப்பதற்கு கிறிஸ்தவர்கள் பொதுவாக முன்வருவார்கள். மற்றவர்களின் தேவைகளுக்கும் நாம் தாராளமாய் செயல்படவேண்டும். ஏனென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய தேவைகளைப் பூர்த்திசெய்ய இயேசு தன்னுடைய ஜீவனையே கொடுத்தார் (2 கொரிந்தியர் 8:9).
தாராள மனப்பான்மையும் மகிழ்ச்சியும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்று ஏன் எண்ணுகிறீர்கள்? உங்களுடைய தயாள குணத்தின் மூலம் யார் பயனடைந்தனர்?
பிதாவாகிய தேவனே, கொடுப்பதில் கிடைத்த மகிழ்ச்சிக்கு நன்றி. கடினமானதோ அல்லது சாதாரணமானதோ, அனைத்து தேவைகளுக்கும் தாராளமாய் செயல்படக்கூடிய இருதயத்தை எனக்குத் தாரும்.