“எப்படியாகிலும் இது இப்படியிருக்க கூடாதென விரும்புகிறேன்,” அந்த மனிதர், வாலிப வயதிலேயே மரித்த தன் நண்பனின் இரங்கல் கூட்டத்தில் இப்படி புலம்பினார். மானுடத்தின் காலவரையற்ற மனவேதனையின் கடுமை அவர் வார்த்தைகளிலிருந்தது. மரணம் நம் எல்லாரையும் திகைப்பூட்டும், அச்சுறுத்தும். மாற்ற முடியாததை, மாற்ற முயற்சித்து நாம் வேதனையடைகிறோம்.
இயேசுவின் மரணத்திற்குப்பின் “அப்படி நடந்திருக்கக்கூடாது” என்று சீஷர்கள் கருதியிருக்கக்கூடும். அக்கொடுமையான மணித்துளிகளை பற்றி சுவிசேஷங்கள் கொஞ்சமே சொன்னாலும், சில உண்மையான நண்பர்களின் அப்போதைய செயல்களை பதிவுசெய்துள்ளது.
யோசேப்பு, இயேசுவின் ரகசிய விசுவாசியான மதத்தலைவர் (யோவான் 19:38), திடீரென தைரியங்கொண்டு, பிலாத்துவிடம் இயேசுவின் உடலைக் கேட்கிறார் (லூக்கா 23:52). கொடூரமாய் சிலுவையேறிய ஒரு உடலை எடுத்து பதமாக அதை அடக்கம் செய்ய எவ்வாறு ஆயத்தம் செய்திருப்பாரென்று (வச. 53) சற்றே சிந்தியுங்கள்! பாதையெங்கிலும் இயேசுவின் ஒவ்வொரு அடியையும் பின்தொடர்ந்து, அவர் கல்லறை வரையிலுங்கூட வந்த பெண்களின் பக்தியையும், வீரத்தையும் எண்ணிப்பாருங்கள் (வச. 55). மரணமேயானாலும் மாறா அன்பு!
இந்த பின்பற்றுபவர்களின் கூட்டம் உயிர்த்தெழுதலை எதிர்நோக்கவில்லை. அவர்கள் வேதனையில் பங்குபெற உடன்பட்டவர்கள். நம்பிக்கையின்றி, துயரத்தோடு அந்த அதிகாரம் நிறைவடைகிறது, “திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்” (வச. 56).
சரித்திரத்தின் வியத்தகு சம்பவத்திற்கு, அந்த ஓய்வுநாளின் இடைவேளை காரியங்களை தயார் செய்துகொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை. கற்பனைச்செய்ய முடியாததை இயேசு செய்யப்போகிறார். அவர் மரணத்தையே “அப்படியல்ல” என மாற்றப்போகிறார்.
மோசமான நேரங்களில் ஆறுதலுக்காக எங்கே போவீர்கள்? உயிர்த்தெழுதல் உண்மையானதே என எப்படி வாழ்ந்துகாட்டுவீர்கள்?
பிதாவே, இன்று நான் சற்று இடைநிறுத்தி அன்று உம் குமாரனின் சிலுவை மரணத்திற்கும், உயிர்தெழுதலுக்குமிடையே எப்படி சூழ்நிலை இருந்திருக்கும் என எண்ணிப்பார்க்கிறேன். பாவத்தின் சாபத்தை எனக்காக அவர் தலைகீழாக்கியதற்கு நன்றியுணர்வுள்ளவனாய் இருக்கிறேன்.