டச்சு ஓவியரான எக்பெர்ட் மோடெர்மன் வரைந்த “சிரேனே ஊரானாகிய சீமோன்”என்ற ஓவியத்தில் அவர் கண்கள் துயரத்தால் பிதுங்கியிருந்தன. சீமோனின் கண்கள் உடலளவிலும், மனதளவிலும் அவர் சுமந்த பொறுப்பின் தீவிர பாரத்தை வெளிப்படுத்தின. மாற்கு 15ம் அதிகாரத்தில், வேடிக்கைப் பார்த்த கூட்டத்திலிருந்து சீமோன் இழுக்கப்பட்டு, இயேசுவின் சிலுவையை சுமக்க கட்டாயப்படுத்தப்பட்டதை அறியலாம்.
சீமோன், சிரேனே ஊரைச் சேர்ந்தவர் என மாற்கு நமக்கு அறிவிக்கிறார். அது இயேசுவின் காலத்தில் யூதர்கள் அதிகம் வசித்த வட ஆப்பிரிக்காவின் பெரிய நகரம். சீமோன் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட எருசலேமுக்கு வந்திருக்கலாம். அங்கே இந்த அநீதியான மரணதண்டனை நிகழ்வில் தானும் எதிர்பாராமல் பங்கேற்க, இயேசுவுக்கு சிறிய ஆனால் அர்த்தம் நிறைந்த உதவியை அவரால் செய்ய முடிந்தது (மாற்கு 15:21).
முன்னதாக மாற்குவின் சுவிசேஷத்தில், இயேசு தம் பின் செல்பவர்களிடம், “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” (8:34) என்றார். இயேசு தம் சீஷர்களிடம் அடையாளமாகச் சொன்னதை, கொல்கொதாவின் வீதிகளில் சீமோன் நிஜமாகவே செய்கிறார்: தனக்களிக்கப்பட்ட சிலுவையை எடுத்து, இயேசுவுக்காக அதை சுமந்தார்.
நாமும் சுமக்கவேண்டிய “சிலுவைகள்” உண்டு. அது நோயாக இருக்கலாம், கடினமான ஊழிய பணியாயிருக்கலாம்; நாம் நேசித்தவரின் மரணமாயிருக்கலாம்; அல்லது நம் விசுவாசத்தினிமித்தம் வரும் உபத்திரவமாய் இருக்கலாம். நாம் இத்துன்பங்களை விசுவாசத்தில் சுமக்கையில், நாம் ஜனங்களை இயேசுவின் துயரங்களுக்கு நேராகவும், அவர் சிலுவை தியாகத்திற்கு நேராகவும் வழிநடத்துகிறோம். அவருடைய சிலுவையே நம்மை தேவனோடு ஒப்புரவாக்கி, நம்முடைய பயணத்தில் நம்மை பெலப்படுத்துகிறது.
எந்த “சிலுவையை” சுமக்கும்படி நீங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறீர்கள்? நீங்கள் பிறருக்கு இயேசுவை சுட்டிக்காட்ட இந்த பாடுகளின் பாதையை எவ்வாறு பயன்படுத்துவீர்கள்?
இயேசுவே, என் சிலுவையை எடுத்துக்கொண்டு உம்மை பின்பற்றுகையில் நான் அனுபவிக்கும் வலியை நீர் அனுதாபத்தோடு புரிந்துகொள்வதற்காக உமக்கு நன்றி. பயணம் கடினமாய் இருந்தாலும் எனக்கு தைரியத்தையும், பெலத்தையும் தாரும்.