அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. நாம் வழக்கமாக குருத்தோலை ஞாயிறு என்றழைக்கும் நாள். சந்தேகமேயில்லை, இயேசு எருசலேமுக்கு வருவது இது முதல்முறை அல்ல. ஒரு பக்தியுள்ள யூதனாக எல்லா வருடமும் மூன்று பெரிய பண்டிகைகளுக்கு தவறாமல் அங்கே சென்றிருப்பார் (லூக்கா 2:41–42; யோவான் 2:13; 5:1). கடந்த மூன்று வருடங்களாக கிறிஸ்து எருசலேமில் போதித்து, ஊழியமும் செய்தார். ஆனால் இந்த ஞாயிறு அப்பட்டணத்தில் அவர் வருகை முற்றிலும் வித்தியாசமாயிருந்தது.
ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள் பட்டணத்திற்குள் வந்துகொண்டிருக்கும் வேளையில், கழுதையின்மேல் ஏறி எருசலேமுக்கு வந்த இயேசுவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் (மத்தேயு 21:9–11). கடந்த மூன்று வருடங்களாக வேண்டுமென்றே தன்னை தாழ்த்திக்கொண்டவர், இப்போது ஆயிரக்கணக்கானவர்கள் முன்பில் பிரதான இடத்தை ஏன் எடுத்துக்கொண்டார்? தான் மரிக்கப்போகும் வெறும் ஐந்து நாட்களுக்கு முன்பு, அவரை ராஜா என்று அறிவித்த ஜனங்களின் கூற்றை ஏன் அங்கீகரித்துக்கொண்டார்?
ஐநூறு ஆண்டுகள் வயதான தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாகவே இச்சம்பவம் நடந்ததாக மத்தேயு கூறுகிறார் (மத்தேயு 21:4–5). அதாவது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ராஜா எருசலேமுக்குள் “நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்” (சகரியா 9:9; மேலும் ஆதியாகமம் 49:10–11) என்பதே அத்தீர்க்கதரிசனம்.
வெற்றிகொண்ட ராஜா ஒரு நகரத்தினுள் பிரவேசிக்க இது முற்றிலும் வித்தியாசமான வழி. வெற்றிபெறும் அரசர்கள் பொதுவாக பராக்கிரமமான குதிரைகளில் தான் பவனி வருவார்கள். அனால் இயேசு யுத்த குதிரையில் ஏறி வரவில்லை. இதுவே இயேசு எப்படிப்பட்ட ராஜா என்பதை வெளிப்படுத்துகிறது. அவர் தாழ்மையாகவும், சாந்தமாகவும் வந்தார். இயேசு யுத்தத்திற்கு வரவில்லை; மாறாக, சமாதானத்திற்கு வந்தார். நமக்கும் தேவனுக்குமிடையே சமாதானம் உண்டாக்க வந்தார் (அப்போஸ்தலர் 10:36; கொலோசெயர் 1:20).
உங்களுக்கு இயேசு இன்று எத்தகைய ராஜா? உங்கள் ராஜாவாக அவரை எவ்வாறு நீங்கள் கனப்படுத்துவீர்கள்?
இயேசுவே, உமது வல்லமையான, தாழ்மையான வழிகளை வெளிப்படுத்த நீர் எருசலேமுக்கு வந்ததற்காய் நன்றி. உம் சமாதானத்தால் என் மனதை நிரப்பும்.