“சாப்பிட்டீங்களா?” இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள விருந்தினர்களை உபசரிக்க முதலில் கேட்கப்படும் கேள்வி இது. விருந்தினர்களிடம் அன்பையும், கரிசனையையும் காட்டும் தமிழர்களின் வழக்கம் இது. இதற்கு நீங்கள் என்ன பதில் கூறினாலும், அந்த வீட்டினர் உங்களுக்கு சாப்பிட ஏதாவது சமைத்து விடுவார்கள். குறைந்தபட்சம், குடிக்க தண்ணீராவது தருவார்கள். உண்மையான அன்பு என்பது வெறும் வார்த்தையில் வாழ்த்து சொல்வது மட்டுமல்ல; மாறாக, உபசரிப்பில் காண்பிக்கப்படவேண்டும் என தமிழர்கள் நம்புகின்றனர்.
தயவு காட்டுவதைக் குறித்து ரெபேக்காள் நன்கு அறிந்திருந்தாள். பட்டணத்தின் வெளியேயிருந்த கிணற்றில் தண்ணீர் எடுப்பதும், கனமான அந்த குடத்தை வீட்டிற்கு கொண்டுசெல்வதுமே அவளின் அன்றாட வாடிக்கை. ஆபிரகாமின் வேலைக்காரன், தன் பிரயாணத்தால் மிகவும் தாகமுற்று, அவளிடத்திலிருந்த தண்ணீரை கொஞ்சம் கேட்க, அவள் சற்றும் தயங்காமல் அதைக் கொடுத்து உதவுகிறாள் (ஆதியாகமம் 24:17–18).
அத்தோடு ரெபேக்காள் நிறுத்தவில்லை. தன் விருந்தாளியின் ஒட்டகங்கள் தாகமாய் இருப்பதைப் பார்த்து, உடனே அவைகளுக்கும் தண்ணீர் வார்க்க திரும்பிச் செல்கிறாள் (வச. 19–20). அந்த கனமான குடத்தைத் தூக்கிக்கொண்டு, மீண்டும் மீண்டும் நடந்து, உதவி செய்ய அவள் தயங்கவில்லை.
அநேகருக்கு வாழ்க்கையே கடினமாயிருப்பதால், செயலில் காட்டப்படும் சிறிதளவு அன்பு கூட அவர்களை ஊக்கப்படுத்தி, புத்துயிரூட்டும். வல்லமையான பிரசங்கத்தை செய்வதும் திருச்சபையை நாட்டுவதும் மட்டும் தெய்வீக அன்பின் அடையாளமன்று; மாறாக, தேவையில் உள்ளோருக்கு குடிக்கத் தண்ணீர் கொடுப்பதும் தெய்வீக அன்பின் அடையாளமே.
யாருக்கு இன்று உற்சாகம் தேவைப்படுகிறது? அவர்களை உற்சாகப்படுத்த எந்த காரியத்தை இன்று செய்யப்போகிறீர்கள்?
பரலோக தகப்பனே, என்னை சுற்றியிருப்பவர்களின் தேவைகளைப் பார்க்க என் கண்களை திறந்தருளும். அவர்களுக்கு எவ்வாறு தயவு, அக்கறை காட்டவேண்டுமென்ற ஞானத்தை எனக்குத் தாரும்.