நான் வேதாகம கல்லூரியில் பயிலும்போது, முழுநேர வேலையிலும் ஈடுபட்டிருந்தேன். அதேவேளையில் பகுதி நேர போதகராக, சுற்றுமுறையில் ஒரு சபையிலும் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நான் பரபரப்பாக இருந்தேன். என் தந்தை என்னை சந்தித்தபோது, “நீ முடங்கிடுவாய்” என்றார். அவர் அந்த காலத்தை சேர்ந்தவர் என்றும், இலக்கை நிர்ணயிப்பதைக் குறித்து அறியாதவர் என்றுமெண்ணி, அவர் எச்சரிப்பை உதறித் தள்ளினேன்.

நான் முடங்கவில்லை. ஆனால் கடும் வறட்சியான, கடினமான காலகட்டத்தில் மன அழுத்ததில் வீழ்ந்தேன். அன்றிலிருந்து, எச்சரிப்புகளுக்கு செவிசாய்க்கக் கற்றுக்கொண்டேன். குறிப்பாக என்னை நேசிக்கிறவர்களிடமிருந்து அது வரும்போது அவற்றை கவனமாகக் கேட்பேன்.

அது எனக்கு மோசேயின் சம்பவத்தை நினைப்பூட்டுகிறது. அவர் இஸ்ரவேலின் நியாயாதிபதியாக, விடாமுயற்சியுடன் பணியாற்றிக் கொண்டிருந்தார் (யாத்திராகமம் 18:13). எனினும், தன் மாமனாரின் எச்சரிப்புக்கு செவிகொடுத்தார் (வச. 17–18). எத்திரோ, செய்வதற்கு அநேக வேலைகள் அவருக்கில்லை. ஆனால், அவர் மோசேயையும் அவனுடைய குடும்பத்தையும் நேசித்ததால், வரப்போகும் பிரச்சனையை முன்னறிந்தார். ஒருவேளை மோசே எத்திரோக்கு செவிசாய்த்து, அவர் ஆலோசனையைக் கேட்க இதுவும் காரணமாயிருக்கலாம். மோசே, சிறிய பிரச்சனைகளைத் தீர்க்க “ஜனங்களுக்குள் விசேஷித்தவர்களை” தெரிந்துகொண்டு, பெரிய பிரச்சனைகளை தானே கையாளுகிறார் (வச. 21–22). அவர் எத்திரோவின் ஆலோசனைக்கு செவிசாய்த்து, தன் பாரத்தை தானே சுமக்காமல், மற்றவர்களுக்கு பகிர்ந்துகொடுத்ததினால் அவருக்கு எதிர்படவிருந்த பிரச்சனைகளைத் தவிர்க்க முடிந்தது.
தேவனுக்கு செய்யும் ஊழியமோ, அல்லது குடும்ப காரியங்களோ அல்லது மற்ற காரியங்களைச் செய்வதற்கு இன்று நம்மில் அநேகர் ஆர்வம் காண்பிக்கிறோம். ஆனால் நம்மை நேசிக்கும் நம்பிக்கைக்குரிய நபர்களின் ஆலோசனைக்கு செவிசாய்த்து, நாம் செய்யும் அனைத்திலும் தேவனின் ஞானத்தையும், வல்லமையையும் சார்ந்துகொள்ள வேண்டும்.