கிராமங்களில், களஞ்சியம் கட்டுதல் என்பது ஒரு கூட்டுமுயற்சி. விவசாயி தனியாகவோ அல்லது குடும்பமாக இணைந்தோ அதைக் கட்ட பல மாதங்கள் ஆகும். ஆனால் கிராம மக்கள் ஒன்றாய் கூடும்போது, வேலை விரைவாக முடியும். முன்னரே மரச்சாமான்களை ஆயத்தப்படுத்தி, கருவிகளை தயார் செய்துகொள்வார்கள். குறிப்பிட்ட ஒரு நாளில், மொத்த கிராம மக்களும் காலமே இணைந்து வந்து, வேலைகளை பிரித்துக்கொண்டு, ஒரு களஞ்சியத்தைக் கட்டியெழுப்ப முழுவீச்சில் செயல்படுவர். சிலசமயம் ஒரே நாளில் வேலை முடிந்துவிடும்.
திருச்சபையைக் குறித்தும், அதில் நம்முடைய பங்களிப்பைக் குறித்தும் தேவனுடைய பார்வையை விளக்க இது ஒரு நல்ல உதாரணம். “நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்” (1 கொரிந்தியர் 12:27) என வேதம் கூறுகிறது. குறிப்பிட்ட ஒரு நோக்கத்தை செயல்படுத்துவதற்கு, தேவன் நம் எல்லாரையும் தனித்தனியே தெரிந்துகொண்டு, நம்முடைய விசேஷமான திறமைகளில் நம்மை ஈடுபடச் செய்து, ஒன்றாய் இசைந்திருக்கும் சரீரத்தின் (எபேசியர் 4:16) பாகங்களாக வடிவமைக்கிறார். சமுதாயத்தில், நாம் “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க” (கலாத்தியர் 6:2) ஊக்குவிக்கப்படுகிறோம்.
இருப்பினும் நாம் பெரும்பாலும் தனித்தே செயல்படுகிறோம். நமக்கு தேவையானவைகளை நாமே வைத்துக்கொள்கிறோம், சூழ்நிலைகளை நாமே கையாளப் பார்க்கிறோம். அல்லது பாரத்தோடு இருக்கும் மற்றவரின் தேவையை சந்தித்து தோள் கொடுக்கத் தவறுகிறோம். ஆனால் நாம் மற்றவர்களோடு இணைந்திருப்பதையே தேவன் விரும்புகிறார். நாம் பிறர் உதவியை கேட்கும்போதும், பிறர் தேவைக்காக ஜெபிக்கும்போதும் அற்புதமான காரியங்கள் நடக்குமென தேவன் அறிந்துள்ளார்.
நாம் ஒருவரையொருவர் சார்ந்துகொள்ளும்போதே நமக்கென தேவன் வைத்திருக்கிற ஆசீர்வாதத்தை அனுபவிக்க முடியும். மேலும் ஒரே நாளில் களஞ்சியத்தைக் கட்டுவதுபோல, நம்முடைய வாழ்க்கையைக் குறித்த அவருடைய ஆச்சரியமான திட்டத்தை நிறைவேற்ற முடியும்.
உங்கள் தேவையை மற்றவர்களோடு பகிர தடையாய் இருப்பதென்ன? மற்றொருவரை இன்று சந்தித்து, அவர் பாரத்தை சுமக்க தோள்கொடுக்க நீங்கள் செய்யக்கூடியதென்ன?
அன்பின் தேவனே, நான் சிலநேரங்களில் மற்றவர்களை என்னுடைய வாழ்க்கையில் அனுமதிக்காமல் தனிமை விரும்பியாய் இருப்பதை அறிவேன். என் தனிமையைவிட்டு வெளியேறி, பிறரோடு இணைய எனக்கு உதவும்.