இந்தியாவில் மனநலம் குன்றிய பிள்ளைகளுக்காய் நடத்தப்படும் கிறிஸ்தவ பள்ளியொன்றிற்கு மாநகராட்சி வாரியத்திலிருந்து பெரும் நன்கொடை அளிக்கப்பட்டது. அதில் எந்த வில்லங்கமும் இல்லை என்று அறிந்த பின்னரே, அந்த தொகையை அவர்கள் பெற்றுக்கொண்டனர். ஆனால் பின்நாளில் மாநகராட்சி வாரியம், அந்த தொகைக்கான பிரதிநிதித்துவம் கோரியது. உடனே, அந்த பள்ளியின் இயக்குனர் அந்தத் தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டார். பள்ளியின் கொள்கையை விட்டுக்கொடுக்க அவருக்கு மனதில்லை. “தேவனுடைய சேவையை, தேவனுடைய வழியில் செய்வது மிகவும் அவசியம்” என்று அவர் கூறுகிறார்.
நமக்கு வரும் உதவியை நிராகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் இதுவும் ஒன்று. வேதாகமத்தில் வேறொன்றைப் பார்க்க முடியும். சிறையிருப்பிலிருந்து, யூதர்கள் மீண்டு திரும்பியதும், அவர்களுடைய ஆலயத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு கோரேசு ராஜாஅனுமதியளித்தான் (எஸ்றா 3). “உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப் போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்” (4:2) என்று மற்றவர்கள் சொல்லும்போது இஸ்ரவேலின் தலைவர்கள் அதை நிராகரித்தனர். அவர்கள் ஒருவேளை அந்த உதவியை ஏற்றுக்கொண்டிருந்தால், ஆலயத்தை மீண்டும் கட்டும் முயற்சியில் தோல்வியடைந்திருப்பர். ஏனென்றால், அவர்கள் விக்கிரக ஆராதனைக்காரர்கள் என்பதினால், அவர்களின் விக்கிரக ஆராதனை உள்ளே புகுந்திருக்கக்கூடும். இஸ்ரவேலர்கள் சரியான தீர்மானத்தை எடுத்தனர். ஆகையால் எதிர்ப்பாளர்கள் ஆலயக்கட்டுமானப் பணியை தங்களால் முடிந்த அளவிற்கு தடை செய்தனர்.
பரிசுத்த ஆவியின் துணையோடும், விசுவாசிகளின் ஞானமான ஆலோசனையோடும் நாம் பகுத்தறிந்து செயல்பட பழகலாம். ஆவிக்குரிய வாழ்க்கையை பாதிக்கக்கூடிய சிநேகிதமான வாய்ப்புகளைத் தவிர்க்கவேண்டும். ஏனென்றால் தேவனுடைய பணியை தேவனுடைய வழியில் செய்யும்போது எந்த நன்மையும் குறைவுபடாது.
தேவனுடைய ஊழியத்தில் ஆர்வம் குறைவுபடக் கூடிய வகையில் வரும் வாய்ப்புகளோடு கைகோர்ப்பதினால் ஏற்படும் அபாயங்கள் என்ன? எவ்வாறு நீங்கள் பகுத்தறிந்து செயல்படமுடியும்?
அன்பான தகப்பனே, என்னுடைய தேவையை நீர் அறிவீர். மற்றவர்களோடு எவ்வாறு கைகோர்ப்பது என்பதை அறிய தேவையான ஞானத்தையும், பகுத்தறிவையும் எனக்குத் தாரும்.