ஹாரியட் டப்மேனால்  எழுத, படிக்க முடியாது. ஒரு இளம்பெண்ணாக, தன்னுடைய கொடூரமான எஜமானால் அவள் தலையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் அவளை வாழ்நாள் முழுதும் வலிப்பினாலும், ஞாபக மறதியினாலும் பாதித்தது. ஆனால் அவளுடைய அடிமைத்தனத்திலிருந்து தப்பியவுடனே, தேவன் அவளைக்கொண்டு அவளைப் போன்ற சுமார் முன்னூறு பேரை மீட்டார்.

தான் மீட்டவர்களால் “மோசே” என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஹாரியட், வீரமாக பத்தொன்பது முறை உள்நாட்டுப் போருக்கு முன்பாக தெற்கு பக்கம் போய், அங்குள்ள தன்னைப் போன்ற மற்றவர்களை மீட்டார். அவளை உயிருடன் பிடித்தாலோ அல்லது கொன்றாலோ தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டும், அவளுடைய உயிருக்கு எப்பொழுதுமே ஆபத்து இருந்தும், அவள் இதை தொடர்ந்து செய்தாள். இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விசுவாசியாக இருந்த அவள், எப்பொழுதும் தன்னுடைய பிரயாணங்களில் ஒரு பாட்டு புத்தகத்தையும், வேதாகமத்தையும் எடுத்துக்கொண்டு போய் மற்றவர்கள் அவளுக்கு வசனங்களை படிக்க கேட்பாள். அவைகளை அற்பணத்தோடு மனப்பாடம் செய்து அடிக்கடி மேற்கோள் காட்டுவாள் “நான் எப்பொழுதும் ஜெபம் செய்வேன்; என்னுடைய வேலையை குறித்து, எங்கேயும் நான் எப்பொழுதும் தேவனோடு பேசிக் கொண்டிருப்பேன்” என்று அவள் கூறுகிறாள். மேலும் அவளுடைய சிறிய வெற்றிகளுக்கு கூட தேவனையே காரணராக கூறினாள். ஆதி கிறிஸ்தவர்களுக்கு, அப்போஸ்தலன் பவுலின் அறிவுரைகள் இவளுடைய வாழ்வில் வல்லமையாக வெளிப்பட்டது “எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.” (1 தெசலோனிக்கேயர் 5:16-18).

நாம் எப்போதும் தேவன் பட்சம் சாய்ந்து, ஜெபத்தை நம்பியே வாழ்ந்து, அவரை நம்முடைய கடினமான சூழ்நிலைகளிலும் கூட துதிக்கும் போது, அவர் நம்முடைய மிக சவாலான பணிகளையும் செய்து முடிப்பதற்கு ஏற்ற  பெலன் அளிப்பார். நம்முடைய இரட்சகர் நாம் எதிர்கொள்ளும் எதையும் விட மிகவும் பெரியவர், நாம் அவரை நோக்கி பார்க்கும்போது அவர் நம்மை நடத்துவார்.