இளைஞர் ஒருவரிடம் நீங்கள் எப்படி பத்திரிக்கை நிருபரானீர்கள் என்று கேட்டபோது, அவருடைய கல்வியின் மீது அவருடைய தாயாருக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வுதான் காரணம் என்று பதிலளித்தார். அவரின் அம்மா தினந்தோறும் சுரங்கப்பாதையில் பயணம் செய்யும்போது, அங்கே கிடக்கும் மீதமுள்ள செய்தித்தாள்களைச் சேகரித்துக் கொண்டுவந்து தருவாராம். அவருக்கு விளையாட்டு செய்திகளை விரும்பிப் படிக்க பிடிக்கும் என்றாலும், அந்த செய்தித்தாள்கள் அவருக்கு உலக அறிவை அறிமுகம் செய்து வைத்தது. இறுதியில், அவருக்கு இந்த குறிப்பிட்ட துறையில் ஆர்வம் ஏற்பட்டது. 

குழந்தைகள் இயற்கையாகவே கற்பதில் ஆர்வமுடனும் விருப்பத்துடனும் இருக்கிறார்கள். வேதாகமத்தை சிறுவயதிலேயே அறிமுகப்படுத்தும்போது, தேவனுடைய அசாதாரணமான வாக்குத்தத்தங்களும், வேதாகம கதாநாயகர்களின் உற்சாகமான சரித்திரங்களும் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். வேதாகம அறிவில் தேறும்போது, பாவத்தின் விளைவுகள், மனம் திரும்புதலுக்கான தேவை, தேவன் மீது வைக்கும் விசுவாசத்தால் ஏற்படும் மகிழ்ச்சி ஆகியவற்றைக் குறித்து தெளிவாய் புரிந்துகொள்வார்கள். உதாரணமாக, நீதிமொழிகளின் 1ம் அதிகாரம் ஞானத்தால் அடையும் நன்மைகளைப் பற்றி நேர்த்தியாய் அறிமுகப்படுத்துகிறது (நீதி. 1:1-7). ஞானத்தைக் குறித்த இந்த போதனைகள் நடைமுறை வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. 

குறிப்பாய் ஆவிக்குரிய சத்தியங்களை கற்பதில் ஆர்வத்தை வளர்த்துக்கொள்வது விசுவாசத்தில் உறுதியாய் வளருவதற்கு வழிவகுக்கிறது. ஆண்டாண்டுகளாய் விசுவாசத்தில் நடக்கிறவர்களும் தங்களுடைய வாழ்க்கையில் இந்த தெய்வீக ஞானத்தை பெற்றுக்கொள்ள தொடர்ந்து பிரயாசப்படலாம். “புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் தேறுவான்” என்று நீதிமொழிகள் 1:5 ஆலோசனைக் கூறுகிறது. நாம் நமது இருதயத்தையும் மனதையும் அவருடைய வழிகாட்டலுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் திறந்து வைத்தால், தேவன் நமக்கு கற்றுக்கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டார்.