சிலவேளைகளில் தேவசித்தத்திற்கு கீழ்படிவது கடினம். அவர் நம்மை சரியான காரியத்தை செய்ய தூண்டுவார். அவர் நம்மை முறுமுறுப்பில்லாமல் பாடுகளை சகிக்கவும், கடினமான மக்களை நேசிக்கவும், “நீ அதை செய்யக்கூடாது” என்று நமக்குள்ளே ஒலிக்கும் அந்த சத்தத்திற்கு கீழ்ப்படியவும், நாம் எடுக்க விரும்பாத அடிகளை எடுத்து வைக்கவும் அழைத்திருக்கிறார். ஆகையால் ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய ஆத்துமாவைப் பார்த்து, “ஆத்துமாவே, கேள். அமைதியாயிரு: இயேசு என்ன செய்ய சொல்லுகிறாரோ, அதைச் செய்” என்று சொல்லவேண்டும்.
“தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது” (சங்கீதம் 62:1). “என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு” (62:5). இந்த இரண்டு வார்த்தைகளும் ஒன்றுபோல் தெரியும். ஆனால் இரண்டும் ஒன்றல்ல. தாவீது தன்னுடைய ஆத்துமாவைக் குறித்து சொல்லுகிறார்; பின்னர் தன் ஆத்துமாவிடம் சொல்லுகிறார். “அமர்ந்திருக்கிறது” என்பது மனஅமைதிக்கான தீர்மானம். “அமர்ந்திரு” என்பது அந்த தீர்மானத்தை நினைவுகூருவதற்கான தூண்டுதல்.
தாவீது, தேவ சித்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து, அமர்ந்திருப்பதை தெரிந்துகொண்டார். நாம் சிருஷ்டிக்கப்பட்டதற்கும் அழைக்கப்பட்டதற்குமான நோக்கமும் அதுவே. “ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (லூக்கா 22:42) என்பதை ஒத்துக்கொண்டால் நாம் சமாதானமாய் வாழலாம். தேவனை தேவனென்று ஏற்றுக்கொள்வதும் நம்முடைய ஆழமான உணர்வுகளுக்கு அவரே ஆதாரம் என்பதை ஒத்துக்கொள்வதுமே நம்முடைய முதன்மையும் மேன்மையுமான அழைப்பு. “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்” (சங்கீதம் 40:8) என்று சங்கீதக்காரன் பாடுகிறான்.
நாம் “நம்புகிறது அவராலே வரும்” என்பதினால், நாம் உதவிக்காய் அவரையே நாடுவது நல்லது (62:5). அவரிடத்தில் உதவி கோரினால், அவர் நம்மை மீட்டுக்கொள்வார். அவரால் செய்ய முடியாத அல்லது செய்ய விரும்பாத எதையும் செய்யும்படிக்கு நம்மை தூண்டமாட்டார்.
தேவ சித்தம் செய்வது கடினம் என்று உங்களுக்கு எப்போது தோன்றியது? அவரிடத்தில் அமர்ந்திருந்து ஜீவிப்பது எப்படி?
தகப்பனே, உம்முடைய சித்தத்தை எல்லா வேளைகளிலும் நான் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு கீழ்ப்படிவதற்கு எனக்கு உதவிசெய்யும். உம்முடைய உண்மையான நல்ல குணாதிசயங்களை நம்புவதற்கு எனக்குக் கற்றுத்தாரும். கீழ்படிகிற இருதயத்தை எனக்குத் தாரும்.