வெகுசிறப்பான வாழ்க்கை
ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த மருத்துவ நிபுணரான கேத்ரீன் ஹம்லினைக் குறித்து பத்திரிக்கையில் வெளியான அவருடைய இரங்கல் செய்தியின் மூலம் தெரிந்துகொண்டேன். குழந்தைப் பிறப்பின்போது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படும் பெண்களைத் தாக்கும் ஒருவகையான மகப்பேறு வியாதிக்கு சிகிச்சையளிக்கும் உலகின் முதல் மருத்துவமனையை எத்தியோப்பியாவில் நிறுவியவர்களே இந்த கேத்ரீனும் அவருடைய கணவரும். அதில் 60,000க்கும் அதிகமான பெண்களுக்கு சிகிச்சையளித்த பெருமை இவரைச் சேரும்.
மருத்துவசேவை புரிந்துகொண்டிருந்த தன்னுடைய 92ஆம் வயதிலும், தன்னுடைய ஒவ்வொரு நாளையும் தேனீர் கோப்பையுடனும் வேதபாடத்துடனும் துவங்குவது கேத்ரீனின் வழக்கம். அவரை பேட்டியெடுத்தவர்களிடம், தான் தேவன் கொடுத்த வேலையைச் செய்யும் ஒரு சாதாரண விசுவாசி என்று பதிலளித்தார்.
அவருடைய சிறப்பான வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டதற்கு நான் பெருமைப்படுகிறேன். ஏனெனில், தேவனை மறுதலிப்பவர்களும் நம்முடைய “நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம்... தேவனை மகிமைப்படுத்தும்படி” (1 பேதுரு 2:12), என்று வேதம் விசுவாசிகளை வாழத் தூண்டும் வெகுச் சிறப்பான வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார்.
நம்மை அந்தகார இருளிலிருந்து அழைத்து அவருக்கு சொந்தமாக்கிக் கொண்ட தேவனுடைய ஆவியின் வல்லமையினால், நம்முடைய சேவைகளையெல்லாம் வல்லமையுள்ள விசுவாச சாட்சிகளாக மாற்றமுடியும். தேவன் நமக்கு கொடுத்துள்ள வாஞ்சையையும் திறமைகளையும் அர்த்தமுள்ளதாய் மாற்றக்கூடிய வகையில், தேவ ஜனத்தை அவரண்டை திருப்புவதற்கு அவைகளை நேர்த்தியாய் பயன்படுத்துவோம்.
நீதியின் தேவன்
வரலாற்றின் மிக பிரபலமான “பலிமாடு” அநேகமாக இவளாகத்தான் இருக்கவேண்டும். அவளின் பெயர் டெய்சி, மேட்லின், அல்லது க்வெண்டோலின் (ஒவ்வொரு பெயரும் பரிந்துரைக்கப்பட்டது) போன்றவற்றில் எதுவென்று சரியாய் தெரியவில்லை. ஆனால் 1871ஆம் ஆண்டு சிகாகோ நகரத்தின் மூன்றில் ஒரு பங்கு மக்களை வீடில்லாதவர்களாய் மாற்றிய பெரும் தீ விபத்திற்கு காரணம், ஒ லிரி என்பவருக்கு சொந்தமான இந்த பசுமாடுதான் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. வீசிய காற்றினால் மளமளவென்று மரவீடுகளில் பரவிய நெருப்பு, மூன்று நாட்கள் எரிந்து, முன்னூறுபேரை பலியாக்கியது.
மாட்டுக்கொட்டகையில் இருந்த விளக்கை இந்த பசுமாடு தட்டிவிட்டதினால்தான் தீ பற்றிக்கொண்டது என்று பல ஆண்டுகளாய் நம்பப்பட்டு வந்தது. மேற்படியான விசாரணையில், 126 ஆண்டுகள் கழித்து, இந்த பசுமாடும் அதின் உரிமையாளரும் குற்றமற்றவர்களென்று நிருபிக்கப்பட்டனர். அவர்களின் பக்கத்து வீட்டிலிருந்தே தீ பரவியுள்ளது என்று நகரத்தின் தீயணைப்பு மற்றும் காவல் துறையினரால் கண்டறியப்பட்டது.
நீதி, உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. அது எவ்வளவு கடினம் என்பதை வேதாகமமும் ஒப்புக்கொள்கிறது. சங்கீதம் 13இல் “எதுவரைக்கும்?” என்னும் கேள்வி மீண்டும் மீண்டும் நான்கு தரம் இடம்பெற்றுள்ளது: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனை பண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?” (வச. 1-2). தன்னுடைய புலம்பலின் இடையில் விசுவாசிப்பதற்கும் நம்புவதற்குமான காரணத்தை தாவீது கண்டறிகிறார்: “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்;. உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.” (வச. 5).
நீதி தாமதித்தாலும், தேவனுடைய கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை. அவரை நம்பி அவரில் நாம் தற்காலிகமாய் அல்ல, நிரந்தரமாய் இளைப்பாறுதலடையலாம்.