2020 ஆம் ஆண்டில், கொரோனா வைரஸின் பெரும் பாதிப்பு உலகத்தை அச்சத்தில் விட்டுச் சென்றது. மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர், நாடுகள் முடக்கப்பட்டிருந்தன, விமானங்கள் மற்றும் பெரிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில் வசிப்பவர்களும் தங்களுக்கு வைரஸ் தொற்று வரக்கூடும் என்று அஞ்சினார்கள். பதட்டவியல் நிபுணரான கிரஹாம் டேவி, எதிர்மறையான செய்தி ஒளிபரப்புகள் “உங்களை சோகமாகவும் கவலையுற்றவர்களாகவும் மாற்றக்கூடும்” என்று நம்புகிறார். சமூக ஊடகங்களில் பரவிய ஒரு மீம், தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்க்கும் ஒரு மனிதரைக் காட்டியது, மேலும் கவலைப்படுவதை எவ்வாறு நிறுத்துவது என்று அவர் கேட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, அறையில் இன்னொரு நபர் வந்து டிவியை அணைத்தார், அந்த கேள்விக்கான பதில் கவனத்தை வேறு பக்கம் திருப்புவது தான் என்று பரிந்துரைத்தார்!
லூக்கா 12 கவலைப்படுவதை நிறுத்த உதவும் சில அறிவுரைகளை நமக்கு அளிக்கிறது: “அவருடைய ராஜ்யத்தையே தேடுங்கள்” (வச.. 31). அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு பரலோகத்தில் ஓர் உரிமை இருக்கிறது என்ற வாக்குறுதியில் கவனம் செலுத்தும்போது நாம் தேவனுடைய ராஜ்யத்தை தேடுகிறோம். நாம் சிரமத்தை எதிர்கொள்ளும்போது, நம் கவனத்தை மாற்றி, தேவன் நம்மைப் பார்க்கிறார், நம்முடைய தேவைகளை அறிந்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளலாம் (வச. 24-30).
இயேசு தம்முடைய சீஷர்களை ஊக்குவிக்கிறார்: “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.” (வச. 32). நம்மை ஆசீர்வதிப்பத்தில் தேவன் மகிழ்கிறார்! ஆகாயத்து பறவைகள் மற்றும் காட்டுப்பூஷ்பங்களை காட்டிலும் அவர் நம்மீது அக்கறை காட்டுகிறார் என்பதை அறிந்து நாம் அவரை ஆராதிப்போம்(வச.. 22-29). கடினமான காலங்களில் கூட, நாம் வேதவசனங்களைப் படிக்கலாம், தேவனின் சமாதானத்திற்காக ஜெபிக்கலாம், நம்முடைய நல்ல, உண்மையுள்ள தேவன் மீது நம்பிக்கை வைக்கலாம்.
இன்று நீங்கள் பயப்படுவதற்கு எது காரணமாக இருக்கிறது? நீங்கள் கவலைப்படத் தொடங்கும் போது தேவனுடைய ராஜ்யத்தைத் தேட நீங்கள் என்ன செய்ய முடியும்?
அன்புள்ள தேவனே, பயத்தில் அல்லது கவலையில் வாழ்வதற்கு பதிலாக, என்மீது உள்ள உம்முடைய அக்கறையைப் பற்றி கவனம் செலுத்த எனக்கு உதவும்.