ஜனவரி 28, 1986 அன்று, அமெரிக்க விண்வெளி விண்கலம் சேலஞ்சர் புறப்பட்ட எழுபத்து மூன்று வினாடிகளில் உடைந்துபோனது. தேசத்திற்கு ஆறுதல் அளிக்கும் உரையில், ஜனாதிபதி ரீகன் “ஹை பிளைட்” என்ற கவிதையில் இருந்து, அதில் இரண்டாம் உலகப் போரின் விமானியான ஜான் கில்லெஸ்பி மாகி எழுதியுள்ள ” விண்வெளியின் மிகைப்படுத்தப்படாத புனிதத்தன்மை” மற்றும் தனது கையை நீட்டி “தேவனின் முகத்தை” தொடும் உணர்வு பற்றி மேற்கோள் காட்டினார்.
தேவனின் முகத்தை நாம் உண்மையில் தொட முடியாது என்றாலும், சில சமயங்களில் நாம் அனுபவிக்கிற பிரம்மிக்கத்தக்க சூரிய அஸ்தமனம் அல்லது இயற்கையின் அமைதியான சூழல் அவர் அருகில் உள்ளார் என்ற சிறந்த உணர்வை நமக்கு அளிக்கிறது. சிலர் இந்த தருணங்களை “மெல்லிய இடங்கள்” என்று அழைக்கிறார்கள். வானத்தையும் பூமியையும் பிரிக்கும் இடைவெளி கொஞ்சம் மெல்லியதாக காணப்படுகிறது. தேவனை கொஞ்சம் நெருக்கமாக உணர்கிறோம்.
இஸ்ரவேலர்கள் பாலைவன வனாந்தரத்தில் தேவனின் அருகாமையை உணர்ந்ததால் ஒரு “மெல்லிய இடத்தை” அனுபவித்திருக்கலாம். தேவன் பாலைவனத்தின் வழியாக அவர்களை வழிநடத்த பகலில் மேக ஸ்தம்பத்தையும் இரவில் அக்கினி ஸ்தம்பத்தையும் வழங்கினார் (யாத்திராகமம் 40: 34-38). அவர்கள் பாளையத்திலே தங்கினபோது, “கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று” (வச. 35). அவர்களின் எல்லா பிரயாணங்களிலும், தேவன் அவர்களுடன் இருந்ததை அவர்கள் அறிந்தார்கள்.
தேவனின் படைப்பின் நம்பமுடியாத அழகை நாம் ரசிக்கும்போது, அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பது நமக்கு நனவாகிறது. நாம் ஜெபத்திலே அவருடன் பேசும்போது, அவரது வார்த்தைகளை கேட்கும்போது, வேதவசனங்களைப் படிக்கும்போது, எந்த நேரத்திலும் மற்றும் எங்கும் அவரோடு உள்ள ஐக்கியத்தில் மகிழலாம்.
இயற்கையின் குறிப்பாக எந்த இடங்கள் உங்களுக்கு தேவனுடன் நெருக்கமாக இருப்பதை உணரவைக்கிறது? எந்த நேரத்திலும் மற்றும் எங்கும் அவரை எவ்வாறு தேடலாம்?
பிதாவே, நான் ஒரு பாலைவன வனாந்தரத்தில் தொலைந்து போயிருந்தாலும் உம்மைத் தேடி, கண்டடைய எனக்கு உதவும்.