கடந்த கோடை காலத்தில், டேல்குவா என்று அழைக்கப் பட்ட திமிங்கலம் குட்டி போட்டது. ஆயினும் அது ஆபத்து நிறைந்த விலங்குகளின் மத்தியிலிருந்தது. அந்த புதிய ஜீவன் எதிர்கால நம்பிக்கையோடிருந்தது. ஆனால் அந்த குட்டி சில நிமிடங்கள் தான் உயிர் வாழ்ந்தது. அந்த திமிங்கலத்தின் கவலை நிறைந்த காட்சிகளை உலகெங்கும் உள்ள மக்கள் பார்த்தனர். டேல்குவா மரித்துப் போன தனது குட்டியின் உடலை, பசிபிக் கடலின் குளிர்ந்த நீரில் பதினேழு நாட்கள் தள்ளிக் கொண்டே சென்று, கடைசியில் கைவிட்டது.

சில வேலைகளில், இயேசுவின் விசுவாசிகளும் தங்கள் கவலைகளோடு என்ன செய்வதென்று தெரியாமல் திணரலாம். நம்முடைய துயரம் நம்பிக்கையற்றதாக காட்சியளித்து, நம்மை பயப்படுத்தலாம். துயரத்தோடு தேவனிடத்தில் கதறும் அநேகரைப் பற்றி வேதாகமத்தில் காண்கின்றோம். உண்மையான பதிலைப் பெற்றுக் கொள்வதில் புலம்பலும், நம்பிக்கையும் ஆகிய இரண்டுமே முக்கிய பங்காற்றுகின்றன.

புலம்பல் என்ற புத்தகத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன, அவை, தங்களின் தேசத்தை இழந்த மக்களின் துயரத்தை வெளிப்படுத்துகின்றன. அவர்கள் பகைவர்களால் வேட்டையாடப் பட்டு, சாவின் விளிம்பில் இருக்கின்றனர் (3:52-54). அவர்கள் தேவனை நோக்கி அழுது கூப்பிட்டு, தங்களுக்கு நியாயம் செய்யும் படி கேட்கின்றனர் (வ.64). அவர்கள் நம்பிக்கையிழந்ததால் தேவனை நோக்கிக் கதறவில்லை, தேவன் அவர்களின் கூப்பிடுதலைக் கேட்கின்றார் என்ற நம்பிக்கையில் கதறுகின்றனர், அவர்கள் கூப்பிடும் போது தேவன் அவர்களின் அருகில் வருகின்றார் (வ.57).

இந்த உலகத்தில் அல்லது உன்னுடைய வாழ்வில் உடைந்து போன காரியங்களுக்காகப் புலம்புவதில் எந்த தவறும் இல்லை.தேவன் எப்பொழுதும் கவனிக்கின்றார், பரலோகத்திலிருந்து தேவன் உங்களைப் பார்க்கிறார் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.