ஐந்து வருடத் திட்டம் வைத்திருக்கின்றாயா? என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் அறியாத ஒரு பாதை வழியே ஐந்து ஆண்டுகள் செல்ல, நான் எப்படி திட்டமிடமுடியும்?
1960 ல் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில், நான் மாணவர்களின் ஜெபக்குழு தலைவனாக இருந்தேன். நான் அங்கு உடற்பயிற்சி பாடத்தைக் கற்றுக்கொண்டிருந்ததால், அநேக விளையாட்டுகள் இருந்தன. நான் விளையாட்டில் மகிழ்ந்தேன். ஆனால், ஒரு நல்ல போதகனுக்குக் தேவையானதொன்றும் எனக்குப் போதுமானதாக இல்லை. அநேக நாட்கள், அந்த வளாகத்தினுள் ஒரு குருடனைப் போல அலைந்தேன், தேவனிடம், நான் என்ன செய்ய வேண்டும் என கேட்டேன். ஒரு நாள், எதிர்பாராத விதமாக, ஒரு மாணவன் என்னிடம் வந்து, அவனுடைய நண்பர்களுக்கு ஒரு வேத பாட பயிற்சியை நடத்தித் தருமாறு என்னை அழைத்தான். அது தான் என் பணி வாழ்வின் ஆரம்பம்.
தேவன் ஒரு சந்தியில் நின்றுகொண்டு வழிகாட்டுபவரல்ல, அவர் வழி நடத்துபவர். அவர் நம்மோடு நடந்து வருபவர், இதுவரை நடக்காத, நினைத்துப் பார்க்காத, பாதை வழியே நம்மை நடத்திச் செல்பவர். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரோடு கூட நடப்பதே.
நாம் நடக்கும் பாதை எளிதானதாக இருக்காது. சில இடங்கள் கரடு முரடாக இருக்கும், “அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்” என்றும், “அவர்களைக் கைவிடா திருப்பேன்” எனவும் தேவன் வாக்களிக்கின்றார் (ஏசா. 42:16) அவர் எப்போதும் நம்மோடிருக்கும் தேவன்.
“நாம் வேண்டிக்கொள்கிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற தேவன்” (எபே. 3:20). என பவுல் குறிப்பிடுகின்றார். நாம் நமக்கென்று திட்டங்களையும், தரிசனங்களையும் காணலாம். ஆனால், தேவனுடைய திட்டங்கள் நாம் நினைப்பதற்கு மேலானவை. எனவே நாம் நம்முடைய திட்டங்களைப் பற்றிக் கொள்வதை விட்டுவிட்டு, தேவன் நமக்கு வைத்திருக்கும் திட்டத்தை காணும்படி அவரை நோக்குவோம்.
தேவன் உன்னுடைய இருளை எப்படி வெளிச்சமாக்கினார்? தேவனோடு நடந்து செல்லும் போது, மிகப்பெரிய மகிழ்ச்சியான காரியங்கள் என்னென்ன கண்டு கொண்டாய்?
இயேசுவே, நான் நினைப்பதற்கும் மேலாக மிக அதிகமானத் திட்டங்களை நீர் எனக்கு வைத்திருக்கிற படியால் உமக்கு நன்றி கூறுகின்றேன். நான் உம்முடைய வழியில், தொடர்ந்து நடக்க எனக்கு உதவியருளும்.